ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஸவுக்கான கட்டுப்பணத்தை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் செலுத்தியுள்ள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும், அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் வேட்பாளர் மனுத் தாக்கல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வேட்பாளர் கட்டுப்பணம் நேற்று (19.09.19) முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கையேற்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று 3 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை ஏற்கனவே செலுத்தி இருந்தனர். 2 சுயாதீன வேட்பாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவரும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். ஜயந்த கெட்டகொட, சிறிபால அமரசிங்க ஆகியோர் சுயாதீன வேட்பாளர்களாகவும் இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.