ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (24.09.19) இரவு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல உள்ளிட்ட அமைச்சர்களான கபீர் ஹசிம், ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, மலிக் சமரவிக்ரம பங்கேற்றனர். அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு பல்வேறு நிபந்தனைகளுடனே ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது ஒழிப்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை காலை 10 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கூடவுள்ளது. இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பான தீர்மானத்திற்கு செயற்குழுவின் ஒப்புதல் பெறப்படவுள்ளது.