இலங்கை பிரதான செய்திகள்

யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன் இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இதன்போது பல உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன் அதிகமான உணவகங்களில் நீண்டநேரம் சூடான நிலையில் வைத்திருப்பதற்காக றெஜிபோம் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த றொட்டி வகைகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் உணவு தயாரிக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் மயிர்க்கொட்டி, குளவிக்கூடு மற்றும் சிலந்தி வலை என்பன காணப்பட்டதுடன் சமைத்த, சமைக்காத உணவுகள் குளிர்சாதனப் பெட்டியில் ஒன்றாக சேமித்து வைக்கப்பட்டிருந்தன. சில உணவகங்களில்; மூடியற்ற நிலையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்ததுடன் சமைத்த உணவுகள் மூடப்படாத நிலையிலும் வெளிச்சமற்று காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. வேறு சில உணவகங்களில் மிகவும் அழுகிய நிலையில் சமைக்க தயார்நிலையில் இருந்த மரக்கறி வகைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டன.

அத்துடன் பலகடைகளில் இலையான் பெருக்கம் அதிகளவில் இருந்தமை அவதானிக்கமுடிந்தது. இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது 06 உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 05 உணவகங்களில் பரிமாறுவதற்கு தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டன.

இதேவேளை மருந்தகங்களுக்கான பரிசோதனையின்போது பெரும்பாலான பணியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் அற்ற நிலையில் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் மருந்தாளர்கள் இல்லாதிருந்தமையும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  #கரவெட்டி #சுகாதார #உணவகங்கள் #மருந்தகங்கள் #பரிசோதனை

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.