139
மயூரப்பிரியன்
புங்குடுதீவுமாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் காவல்துறை காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்தன் மூலம் 109ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209ஆம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா உள்ளிட்ட 30 பேரை வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை. வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.
வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த தவணையில் உத்தரவிட்டிருந்தது.
அதுதொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவு சார்பில் முன்னிலையான அதிகாரியிடம் மன்று கேள்வி எழுப்பியது.
எனினும் அவர் விசாரணைகள் நிறைவடையவில்லை என்று மன்றுரைத்தார். அதனால் விசாரணையை விரைவுபடுத்தி உரிய அறிக்கையை வரும் 18ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், அன்றுவரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்தார்.
இதேவேளை, இரண்டாவது எதிரி சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் உள்ளார் என்று காவல்துறையினரால் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை.
அவர் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர் என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் கடந்த தவணையின் போது மன்றுக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். மறுநாள் அவரது சடலம் பற்றைக் காணிக்குள் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கின் சந்தேகநபர்களைப் பொலிஸாரும் பொதுமக்களும் பிடித்தனர். சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரையும் ஊர் மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவரை யாழ்ப்பாணம் அழைத்து வந்த உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன், அன்றைய தினம் இரவு காவல்துறை காவலிலிருந்து அவரை விடுவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறையி ர் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதுதொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மூத்த பிரதிகாவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று சட்ட மா அதிபரின் நடவடிக்கைகக்காக விடப்பட்டது.
இதேவேளை, மாணவி படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் (Trial at bar) முன்னிலையில் இடம்பெற்றது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்று சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதனையடுத்தே சுவிஸ் குமாரை தப்பிக்கவைத்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப காவல்துறையினர் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுப்பில் இருந்து விடுவிக்க உதவிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஶ்ரீகஜன் தப்பியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு #புங்குடுதீவுமாணவி #சிறிகஜன் #அறிக்கை
Spread the love