Home இலங்கை சுமணன் கொலை வழக்கு எதிரி சிறையில்

சுமணன் கொலை வழக்கு எதிரி சிறையில்

by admin
மயூரப்பிரியன்

சுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றம்சுமத்தப்பட்ட முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 காவல்துறையினரில் 5ஆவது எதிரி சுகவீனம் காரணமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
5ஆவது எதிரியின் இறப்புத் தொடர்பில் உரிய சான்றிதழ்கள்  கிடைக்கப்பெறவில்லை. அதனால் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து 5ஆவது எதிரியை நீக்கிய திருத்திய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய  அரச சட்டவாதி அனுமதி கோரினார். அதற்கு அனுமதியளித்த மேல் நீதிமன்றம், வழக்கை வரும் ஒக்டோபர் 08ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.இந்த வழக்கை விசாரிப்பதற்கு வேறொரு நீதிபதியை நியமிக்குமாறு  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் தலைவரான பிரதம நீதியரசருக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிஷான்த பிரியபண்டார, ராஜபக்ச முதியன்சேலாகே சங்ஜீவ ராஜபக்ச, கோன்கலகே ஜயன்த மற்றும் ஞானலிங்கம் மயூரன் ஆகிய நான்கு எதிரிகளையும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தினர்.
வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். இதன்போதே 5ஆவது எதிரியான வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறைச்சாலையில் உயிரிழந்தார் என்று ஏனைய எதிரிகளால் மன்றுக்குத் தெரிவிக்கப்பட்டது.
5ஆவது எதிரியின் இறப்புத் தொடர்பில் எந்தவொரு ஆவணமும் கிடைக்கப்பெறவில்லை. 5ஆவது எதிரியின் இறப்பை உறுதிப்படுத்தி அவரை குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்கி திருத்திய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மன்று அனுமதியளிக்கவேண்டும்.

இந்த வழக்கை  மூத்த சொலிஸ்டார் ஜெனரல் குமாரரட்ணம் நெறிப்படுத்துவார். அவர் மன்றில் முன்னிலையாக தவணை வழங்கப்படவேண்டும்என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார். அதற்கு அனுமதியளித்த மேல் நீதிமன்றம் வழக்கை வரும் ஒக்டோபர் 08ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.பின்னணி

சுன்னாகம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில்  2011ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னரான காலப் பகுதியில் இடம்பெற்ற 35 லட்சம் ரூபா மதிக்கத்தக்க திருட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி சுன்னாகம் காவல்துறையினரால் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் சிறிஸ்கந்தராஜா சுமணன் முதலாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார். எனினும் விசாரணைக்காக கிளிநொச்சி, வட்டக்கச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமணன்  காவல்துறை  காவலிலிருந்து தப்பித்து இரணைமடுக் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினரால் கிளிநொச்சி நீதிவான் மன்றில் அறிக்கையிடப்பட்டது.

இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏனைய 4 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் பெரும் குற்ற வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் இருவர், சுன்னாகம்  காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8 காவல்துறையினர்  மீது சுமணனை சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மல்லாகம் நீதிமன்றின் அப்போதைய நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் சந்தேகநபர்களின் குற்றச்சாட்டுத் தொடர்பில்  சம்பந்தப்பட்ட பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சித்திரவதை மற்றும் கொலை ஆகிய இரு பிரிவுகளில் வழக்குகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்தல் வழங்கினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்ட சின்தக பண்டார உள்ளிட்ட 5 காவல்துறையினருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுப் பத்திரத்தை கிளிநொச்சி நீதிவான் மன்றில் முன்வைத்தனர்.

அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்தால்  காவல்துறை அதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8காவல்துறையினருக்கு எதிராக 1994ஆம் ஆண்டு சித்திரைவதைகள் சட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

2 காவல்துறையினர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை  பரிசோதகர் திசாநாயக்க முதியன்சேலாகே சின்தக நிசான்த பண்டார உள்ளிட்ட 6 பேரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.

1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்க சித்திரவதைகளுக்கு எதிரான மாநாட்டுச் சட்டம், இலங்கை சித்திரவதைகள் சட்டம், உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சித்திரவதைகளுக்கு எதிரான தீர்ப்புக்கள், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பன்னாட்டு நீதிமன்ற போர்க்குற்றத் தீர்ப்புக்கள், உகண்டா நீதிமன்ற சித்திரவதைக்கு எதிரான தீர்ப்பு உள்ளிட்டவைக்கு அமைவாக 6 குற்றவாளிக்களுக்கும் அதிகூடிய தண்டனையாக தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

வழக்குத் தொடுனர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி குமார் ரட்ணம், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் சிறிஸ்கந்தராசா சுமணைக் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் 5 காவல்துறையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பகர்வுப் பத்திரம் மீதான சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதன் நிறைவில் சந்தேகநபர்கள் ஐவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, 2016ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி  கட்டளையிட்டார்.

வழக்கு மேல் நடவடிக்கைக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாரப்படுத்தப்பட்டது. சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதியால் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்ட 5 காவல்துறை  உத்தியோகத்தர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை 296இன் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் ஐவருக்கும் எதிராக சிறிஸ்கந்தராஜா சுமணனை ராமநாதபுரம் என்னுமிடத்தில் வைத்து  தண்டனைச் சட்டக்கோவை 140ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கூடிய காயம் விளைவித்த குற்றச்சாட்டும்  மற்றும் அதே இடத்தில் வைத்து அவரைக் கொலை  செய்தமைக்காக 296ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய கொலைக் குற்றச்சாட்டும் என 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் 10 சிவில் சாட்சிகள், 2 இராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்து அதிகாரி உள்பட மொத்தம் 40 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த காவல்துறை   பரிசோதகர் நிசாந்த டி சில்வாவும் சாட்சிப் பட்டியலில் உள்ளடங்குகின்றார்.  #சுமணன்  #கொலை #எதிரி #சிறை #சுன்னாகம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More