Home இலங்கை அரசியல் இராஜதந்திர அணுகுமுறையின் அவசியம்…

அரசியல் இராஜதந்திர அணுகுமுறையின் அவசியம்…

by admin

ஒரு மரணச் சடங்கின் மூலம் மத ஆதிக்கத்தையும், இன மேலாண்மையையும் நிலைநிறுத்த முடியும் என்பதற்கு முன் உதாரணமாக நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் இடம் பெற்ற கொலம்பே மேதானந்ததேரருடைய இறுதிக்கிரியைகள் புலப்படுத்தி இருக்கின்றன. இந்த அடாவடித்தனச் செயற்பாடு மத ரீதியானது மட்டுமல்ல. ஆக்கிரமிப்புக்கான போர்க்குணம்; கொண்டதோர் அரசியல் நடவடிக்கையும்கூட. இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள மென்போக்கிலான சண்டித்தனத்தையும், சர்வாதிகாரத்தையும் எவ்வாறு தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாகும்.

இந்த இறுதிக்கிரியைகள் நீதிமன்ற உத்தரவை மீறிச் செய்யப்பட்டன. இந்துக்களின் மதரீதியான கலாசாரப் பண்பாட்டு உரிமைகளை அவமதித்து, அட்டகாசமாகக் காலில் மிதித்து துவம்சம் செய்திருக்கின்றன. இதன் மூலம் காவி உடை தரித்த பிக்குகளும் அவர்களுடைய ஆதரவாளவர்களும் மத ரீதியாக இந்துக்களின் மனங்களைக் கீறி காயப்படுத்தியுள்ளனர். இந்த நாட்டில் மதங்களுக்கிடையில் சமநிலையிலான நல்லிணக்கத்திற்கு இடமில்லை. இனங்களுக்கிடையில் சம நிலையிலான நல்லுறவும் ஐக்கியமும் சாத்தியமில்லை என்பதையும் மதத் தீவிவாத போர்க்குணம் கொண்ட பௌத்த பிக்குகள்; இதன் மூலம் பறைசாற்றி இருக்கின்றனர்.

அது மட்டுமன்றி, முல்லைத்தீவு செம்மலை நீராவிடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் தேசிய சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்கள் மீதான சிங்கள பௌத்தம் அட்டகாசமாகத் தனது அரசியல் ரீதியான மேலாண்மையையும் நிலை நிறுத்தி உள்ளது.

இதற்கு முன்னரும் பௌத்த பிக்கு ஒருவருடைய மரணச் சடங்கில் இத்தகையதொரு சம்பவம் நடைபெற்றிருந்தது. அதனையடுத்து இரண்டு வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக சிங்கள பௌத்தம் சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் சமூகத்தின் மீது மற்றுமொரு பௌத்த பிக்குவினுடைய மரணச் சடங்கின் மூலம் இப்போது அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பு நடத்தி இருக்கின்றது.

யாழ் முற்றவெளிச் சம்பவம்

முன்னைய சம்பவம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றது. வடமாகாண சங்க நாயக்கரும், யாழ்ப்பாணம் நாகவிகாரையின் பிரதான விகாராதிபதியுமாகிய மீஹகாஜந்துரே ஞானரத்தன தேரருடைய மரணத்தின் பின்னர் அவருடைய இறுதிக்கிரியைகளை கலை கலாசாரப் பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்ற யாழ் முற்றவெளி மைதானத்தில் யாழ் மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பளிக்காமல் பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் தகனக்கிரியைகள் செய்யப்பட்டன.

ஆயுதமேந்திய இராணுவத்தினர் சுற்றி வளைத்திருக்க, வெள்ளைச் சிவிலுடையில் சிங்கள பௌத்த மக்களைப் போன்று குவிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் கொழும்பில் இருந்து வந்து குவிந்திருந்த பௌத்த பிக்குகளின் முன்னிலையில் இந்த மரணச் சடங்கு இடம் பெற்றிருந்தது.

அந்த நிகழ்வில் நடுநாயமாகக் கலந்து கொண்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இரங்கல் உரையாற்றியபோது, அந்த இறுதிக்கிரியைகள் முற்றவெளியில் இடம்பெறுவதற்குத் தெரிவிக்கப்பட்டிருந்த எதிர்ப்புணர்வைக் குறிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் நல்லிணக்கம் இருக்கின்றதா, எங்கே நல்லிணக்கம் என வினவி சுற்றுமுற்றும் அதைத் தேடுவதைப் போன்று பார்வையிட்டார்.

சுகயீனமடைந்து கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த ஞானரத்தன தேரர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமானார். அவருடைய சடலத்தை யாழ்பாணத்திற்குக் கொண்டு சென்று இறுதிக்கிரியைகளை பெரியதொரு பொது நிகழ்வாக நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக அப்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க மற்றும்; முன்னாள் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள முனியப்பர் ஆலயப் பகுதியில், 1974 ஆம் ஆண்டு இங்கு நடத்தப்பட்ட தமிழராய்ச்சி மாநாட்டில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 9 தமிழர்களுக்கான நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் இந்தத் தகனக்கிரியைகள் நடத்தப்பட்டன.

மாசுபடுத்தப்பட்ட இந்து மதப் புனிதமும், தமிழாராய்ச்சி மாநாட்டுத் தியாகமும்

இதனால் முனியப்பர் ஆலயச் சூழலின் இந்து மதப் புனிதத் தன்மையையும், தமிழராய்ச்சி மாநாட்டில் அரச பயங்கரவாதமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியாகிப்போன 9 பேரின் தியாகத்தையும் மாசுபடுத்தும் வகையில் நாகவிகாராதிபதியின் உடல் அந்த இடத்தில் எரியூட்டப்பட்டதாகத் தமிழ் மக்கள் கருதினார்கள்.

இந்தச் சம்பவம் யுத்தத்தில் வெற்றி பெற்ற இராணுவத்தின் வெற்றிவாத இறுமாப்பை வெளிப்படுத்தவும், பௌத்த பிக்குகளை முதன்மைப்படுத்தி பௌத்த மதத்திற்குத் இராணுவம் அளிக்கின்ற உயர்ந்த மரியாதையை நிலைநிறுத்தவும் திட்டமிட்டு இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டது என்றும் தமிழ் மக்கள் உணர்ந்தார்கள்.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. யாழ் நாக விகாரையில் இருந்து வெண்ணுடை தரித்த பெரும் எண்ணிக்கையிலான படைச் சிப்பாய்கள் காவி நிறத்திலான கொடிகளை ஏந்திய வண்ணம் வீதியின் இரு மருங்கிலும் அணிவகுத்து முன்னே செல்ல அதன் பின்னணியில் மீஹகாஜந்துரே ஞானரத்தன தேரருடைய பூதவுடல் வைக்கப்பட்ட பேழை பேரணியில் முற்றவெளி மைதானத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இந்தப் பேரணி இடம்பெற்ற வழிநெடுகிலும் பௌத்த பிக்குகளின் காவி உடை நிறத்திலான கொடிகள் பறக்கவிடப்பட்டு அந்த இறுதிக்கிரியை நிகழ்வு விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த அலங்காரங்களுடன் கூடிய ஏற்பாடுகளும் பேரணியும் பேரணியில் ஒலிபெருக்கி மூலமாக விடுக்கப்பட்ட அறிவித்தல்களும் யாழ் மக்களுடைய மனங்களைப் பெரிதும் புண்படுத்துவதாகவே
அமைந்திருந்தன.

மதம் சார்ந்த முரணான மனப்பதிவு

பௌத்தர்களோ பௌத்த சிங்களவர்களோ இல்லாத தமிழ்ப்பிரதேசத்தில் அதுவும் தமிழர்களின் கலாசார நகரமாகக் கருதப்படுகின்ற யாழ் நகர வீதிகளில் இவ்வாறு பௌத்த பிக்கு ஒருவருடைய இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நாட்டில் தீவிரமான மதச் சிந்தனையையும், தீவிர பௌத்த மதப் போக்கையும் கொண்ட பிக்குகள் தமிழ் மக்களுடைய மனங்களில் பௌத்த மதத்தை ஓர் ஆக்கிரமிப்பு மதமாகவே பதியச் செய்துள்ளனர்.

பௌத்த பிக்குகளை மதத் தலைவர்களாகவும் வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த வணக்கத்துக்கு உரியவர்களாகவும் அவர்களால் நோக்க முடியவில்லை. அவர்களின் வருகையை அல்லது பிரசன்னத்தை தங்கள் பிரதேசத்தின் மீது அல்லது தங்கள் மீது மேற்கொள்ளப்படப் போகின்ற ஆக்கிரமிப்புக்கான முன்னோடி அடையாளமாகப் பார்க்கின்ற மன நிலையையே அவர்கள் உருவாக்கி இருந்தனர். பௌத்த பிக்குகளின் அரசியல் நடவடிக்கைகளும் பிற மதங்கள் சார்ந்து அவர்கள் கொண்டுள்ள அணுகுமுறையும் யாழ் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மத்தியிலும் இத்தகைய மனப்பதிவையே உருவாக்கி இருக்கின்றன.

இதனால் நாகவிகாரையின் விகாராதிபதியை ஒரு மதத் தலைவராகவோ அல்லது மதிப்புக்குரிய ஒருவராகவோ அவர்களால் நோக்க முடியவில்லை. அத்துடன் மீஹகாஜந்துரே ஞானரத்தன தேரர் இராணுவ முகாமில் படைச் சிப்பாய்களின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தவர் என்பதும், அவர் தங்கியிருந்த இராணுவ முகாமைச்சேர்ந்த படையினரே அதிக அளவிலான தமிழ் இளைஞர்களின் கைதுகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு தமிழ் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பௌத்த மத பிக்குகளின் நடவடிக்கைகளினால் அவர்கள் மீது மதம் சார்ந்து ஏற்பட்டிருந்த முரணான மனப்பதிவே மீஹகாஜந்துரே ஞானரத்தன தேரருடைய இறுதிக்கிரியைகளை ஒரு சாதாரண நிகழ்வாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த மன எழுச்சி காரணமாக மீஹகாஜந்துரே ஞானரத்தன தேரருடைய சடலம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரப்பட்டமையும் யாழ் முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்ட இராணுவ மயனமான இறுதிக்கிரியை நிகழ்வுகளும் யாழ் மக்கள் மத்தியில் வெறுப்பையும், ஆக்கிரமிப்பு ரீதியான ஓர் அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

திட்டமிட்டச் செயற்பாடுகள்

இதனையடுத்து. இந்த நடவடிக்கைக்கு எதிராக யாழ் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பி முற்றவெளியில் தகனக்கிரியைகள் செய்யப்படக் கூடாது என்பதற்கான சமயாசார, தமிழ்ப் பண்பாட்டு காரணங்களை முன்வைத்து வாதிட்டு தடையுத்தரவு கோரியிருந்தனர்.

முற்றவெளியில் ஒரு தகனக்கிரியை செய்வது பல்வேறு காரணங்களுக்காகப் பொருத்தமற்றது என்றும், அதற்கு உரிய அனுமதி யாழ் மாநகர சபையிடம் பெறப்பட வில்லை என்பதையும் சட்டத்தரணிகள் தமது வாதத்தின்போது சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் தகனக்கிரியைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம் யாழ்ப்பாணத்தின் புராதன கோட்டையை அண்டிய தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான இடம் என்றும் ஏற்கனவே அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றபோது இறுதிக்கிரியைகளுக்கான ஊரவலம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனைத் தடைசெய்தால் யாழ் நகரில் அமைதியின்மையும் வேண்டத்தகாத நிகழ்வுகளும் இடம்பெறக் கூடும் என பொலிசார் முன்வைத்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம் முற்றவெளியில் தகனக்கிரியைகள் செய்வதற்கான அனுமதியை வழங்கியது. ஆனாலும் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை குறித்து தமிழ் மக்கள் மனச் சங்கடத்திற்கும் அதிருப்திக்குமே உள்ளாகியிருந்தனர்.

அந்த முதல் நிகழ்வின் அடியொட்டியே செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் கொலம்பே மேதானந்ததேரருடைய தனக்கிரியைகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகக் கருத வேண்டி உள்ளது.

இந்தத் தகனக்கிரியைகளை நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் நடத்துவது இந்து மதத்தின் புனிதத் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து, அதனை வேறிடத்தில் நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

இந்த விடயம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருந்தபோது, நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த ஞானசார தேரர் கொஞ்ச நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டிருந்தார். நீதிமன்றத்திற்கு வெளியில் வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்தின் முடிவு எத்தகையதாக இருந்தாலும் நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் இறுதிக்கிரியைகள் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

பௌத்த மதத்திற்கு முதன்மை நிலை என்பது பிக்குகளுக்கான முதன்மை நிலையல்ல

இந்த இறுதிக்கிரியைகள் பற்றி பின்னர் கருத்து வெளியிட்ட அவர், நீதிமன்றத்தின் முடிவு வெளிவருவதற்குத் தாமதமாகியதனாலேயே தாங்கள் தனக்கிரியைகளை செய்ததாகக் கூறினார். புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குருக்கந்த மகா விகாரைக்குச் சொந்தமான பகுதியிலேயே கொலம்பே மேதானந்ததேரருடைய உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல. ‘இந்த நாட்டில் சிங்கள பௌத்தம் அரசியலமைப்பில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது வடக்கு கிழக்குக்குப் பொருந்தாது என்றே இந்த விடயத்தில் நீதிமன்றத்தை நாடிய சட்டத்தரணிகள் நினைக்கின்றார்கள். ஒரு பிரிவினைவாத நிலைப்பாட்டிலேயே அவர்கள் நீதிமன்றத்தில் வாதாட முன்வருகின்றார்கள். இதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் பிரிவினைவாதத்தைத் தூண்டி நாட்டில் இல்லாத பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள். இவ்வாறான நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மை நிலை அளித்துள்ளது என்பது உண்மைதான். அதேவேளை ஏனைய மதங்களும் தமது உரிமைகளைக் கொண்டிருக்கின்றன என்றே அரசியலமைப்பு கூறுகின்றது.

பௌத்த மதத்திற்கான முதன்மை என்பது பௌத்த பிக்குகளுக்கு அளிக்கப்பட்ட முதன்மை நிலை என்று கொள்ள முடியாது. அந்த முதன்மை நிலையை பௌத்த பிக்குகள் ஏனைய மதம் சார்ந்த இடங்களிலும், ஏனைய மதம் சார்ந்த விடயங்களிலும் விட்டேற்றியாக நடந்து கொள்வதற்கான சட்ட உரிமை என்று கருதிச்செயற்பட முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இரண்டு மதங்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் அல்லது ஒரு பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவதை அரசியலமைப்பின் பௌத்த மதத்திற்கான முதன்மை நிலை என்ற அந்தஸ்து அனுமதிக்கவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். பௌத்த மதத்திற்கான முதன்மை நிலையைப் பயன்படுத்தி பௌத்த பிக்குகள் தாங்கள் நினைத்தவாறெல்லாம் நடந்து கொள்ள முயற்சிப்பது நல்லதல்ல.

பிற மதங்களைச் சேர்ந்தவர்களை நிந்திப்பதும், அவர்களுடைய மனங்களைக் கீறிக் காயப்படுத்துவதும், மதத் தலைவர்கள் என்ற நிலையில் இருந்து தரம் தாழ்ந்து சண்டியர்களைப் போன்று நடந்து கொள்வதும் பௌத்த மதத்திற்கு அழகல்ல. அது பௌத்த மதத்தின் புனிதத்தையும் கீர்த்தியையும் அவமதிக்கின்ற செயலாகவே முடியும். இதனை ஞானசார தேரர் தலைமையிலான தீவிர மதப்போக்கில் அடாவடியான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம்.

அரசியல் ரீதியான அணுகுமுறை

நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் கொலம்பே மேதானந்ததேரருடைய சடலம் எரியூட்டப்பட்ட சம்பவத்தின்போது நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டதையும், சட்டத்தரணியையும் இந்து ஆலய குருவையும் பொதுமக்களையும் பௌத்த பிக்கு உள்ளிட்டவர்கள் தாக்கியதையும் கண்டித்து முல்லைத்தீவில் மறுநாள் பெரிய அளவிலான கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வவுனியா உள்ளிட்ட இடங்களிலும் கண்டனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராகவும், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சட்டத்தரணிகள் தொடர் பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கிழக்கு மாகாணத்தில் கல்முனையிலும் இத்தகைய போராட்டம் இடம்பெற்றிருந்தது.

நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்ட பௌத்த பிக்குகளைக் கைது செய்ய வேண்டும். சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் இந்தப் போராட்டங்களின்போது முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பௌத்த பிக்குகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்த பதாதைகளையும்; இந்தப் போராட்டங்களின்;போது எரியூட்டி அமது எதிர்ப்புணர்வுகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.

ஆனால் சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் சமூகத்தையும், இந்து மதத்தையும் நிந்திக்கும் வகையில் அடாவடித்தனமாக முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அரச தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக எதுவித கருத்துக்களும் வெளியிடப்படவி;ல்லை. இது கவலைக்குரியது. தமிழ் அரசியல் தலைமைகளின் தீவிர கவனத்திற்கும் சீரிய சிந்தனைக்கும் உரியது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது என்று கூறுவார்கள். அந்த வகையில் பௌத்த பிக்குகளின் ஏனைய சிறுபான்மை மதங்கள் மீதான அடாவடித்தனமான நிந்தனையுடன் கூடிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் வருங்காலத்தில் மிகத் தீவிரமடையவதற்கான அறிகுறியாகவே நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் இடம்பெற்ற பிக்குவின் சடல எரிப்புச் சம்பவம் தென்படுகின்றது.

தமிழ் மக்கள் மீது மத ரீதியான அடக்குமுறையாகவும், அவர்களுடைய மத ரீதியான உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துகின்ற செயற்பாடாகவுமே யாழ் முற்றவெளியிலும் நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியிலும் இடம்பெற்ற பௌத்த பிக்குகளுடைய சடலங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதேபோன்றுதான் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயப் பகுதியில் இந்து மத குருக்கள் மீது எச்சில் தேநீரை வீசியெறிந்த சம்பவத்தையும் நோக்க வேண்டி உள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்குப் பொது அமைப்புக்களும் பொதுமக்களும் சட்டத்தரணிகளும் வீதிகளில் இறங்கி நடத்தகின்ற ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் தீர்வைப் பெற்றுத் தருமா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே தோன்றுகின்றது. இந்த ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் அரசாங்கம் ஏறிட்டுக்கூட பார்ப்பதாகத் தெரியவில்லை.

எனவே, இந்த விடயங்களை அரசியல் ரீதியாக இராஜதந்திர ரீதியில் அணுகி அரசுக்கும் தென்னிலங்கையின் அரசியல்வாதிகளுக்கும் நெருக்கடி கொடுக்கத்தக்க வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்தகைய நெருக்குதலின் ஊடாகவே இவ்வாறான தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கின்ற, அவர்களின் மத உரிமைகளை நிந்தித்து அடக்கி ஒடுக்க முனைகின்ற செயற்பாடுகளுக்குத் தீர்வு காண முடியும்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More