இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் கவனயீன சிகிச்சை சிரேஸ்ட சட்டத்தரணி உயிரிழப்பு

மயூரப்பிரியன்

யாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரின் கவனயீனத்தால் வழங்கப்பட்ட தவறுதலான சிகிச்சை காரணமாக சிரேஸ்ட சட்டத்தரணி உயிரிழந்துள்ளார் என சட்டத்தரணியின் பிள்ளைகள் தெரிவித்தனர்.

அச்சுவேலி தும்பளையை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும் உத்தியோகப்பற்ற நீதிபதியுமான சிவசாமி பாலகிருஷ்ணன் (வயது 69) என்பவரே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மூன்று வார காலங்களில் உடல் நலம் தேறி வந்தார்.
அந்நிலையில் அவருக்கு உணவு வழங்குவற்காக வயிற்றில் சத்திர சிகிச்சை மூலம் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரது உடல் நிலை மோசமாகி வந்துள்ளது. அது தொடர்பில் வீட்டார் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது , குழாய் பொருத்தினதால் அப்படிதான் இருக்கும் என அசண்டையீனமாக பதில் அளித்துள்ளனர்.
அதன் பின்னர் குழாய் ஊடாக உணவு வழங்கப்பட்ட போது , வயிற்றுப்பகுதியில் வீக்கம் காணப்பட்டு உள்ளது. அது தொடர்பிலும் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் சத்திர சிகிச்சை அளித்த வைத்தியரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது , செமிபாட்டு பிரச்சனையால் ஏற்பட்ட வீக்கம் . சத்திர சிகிச்சையில் தவறில்லை. நோயாளி வழமை போன்றே உள்ளார் என அசண்டையீனமாக பதிலளித்துள்ளனர்.
தாதியர்கள், வைத்தியர்கள் நோயாளியின் பிள்ளைகள் கூறியவை எதனையும் கவனத்தில் எடுக்காத நிலையில் தொடர்ந்து குழாய் மூலம் உணவு வழங்கப்பட்ட நிலையில் மூன்றாம் நாள் நோயாளியின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை மீண்டும் சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டு சென்று சத்திர சிகிச்சை மூலம் உணவு வழங்குவதற்கு பொருத்தப்பட்ட குழாயை அகற்றியுள்ளனர்.
குழாய் அகற்றப்பட்டமை தொடர்பில் வைத்தியர்களிடம் நோயாளியின் பிள்ளைகள் வினாவிய போது . முதலில் மழுப்பலான பதில்களையே வழங்கியுள்ளனர். பின்னர் பிள்ளைகள் மருத்துவ அறிக்கையை பார்க்க வேண்டும் என கூறி அதனை பார்த்த போதே , குழாய் தவறுதலாக பொருத்தப்பட்டமையால் ,குழாய் ஊடாக வழங்கப்பட்ட உணவுகள் வயிற்று பகுதிக்குள் சென்றமை தொடர்பில் அறிந்து கொண்டுள்ளனர். அத்துடன் கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் செயலிழந்துள்ளமையாலையே  உடல் நலம் தேறி வந்த தமது தந்தையில் உடல் நலம்  மீள மோசமானது என்பதனை அறிந்து கொண்டுள்ளனர்.
அந்நிலையில் கடந்த 06ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் குறித்த நோயாளி உயிரிழந்தார்.
அதனை அடுத்து தமது தந்தையின் உடல்கூற்று பரிசோதனையை யாழ்.போதனா வைத்திய சாலையில் மேற்கொள்வதில் தமதுக்கு நம்பிக்கையீனம் காணப்பட்டமையை அடுத்து . நீதவானின் அனுமதியை பெற்று தமது தந்தையின் உடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் இருந்து பெற்று கொழும்புக்கு கொண்டு சென்று அங்கு உடல் கூற்று பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்கள்.
அந்நிலையில் தமது தந்தையின் பூதவுடல் அச்சுவேலியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , நாளைய தினம் வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தீர்த்தங்குள பிள்ளையார் கோவிலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவித்தனர்.  #யாழ்போதனாவைத்தியசாலை #கவனயீனசகிச்சை   #சட்டத்தரணி  #உயிரிழப்பு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.