138
மயூரப்பிரியன்
கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை 48 மணிநேரம் காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.
கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவர் வன்முறைக் கும்பலின் தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
அன்றுமாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது.
இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல் தாக்கியிருந்தது. அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 நாள்களின் சிகிச்சையின் பின்னர் அவர் கடந்த 30ஆம் திகதி இரவு உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் ஒளிப்படங்கள் மற்றும் சிசிரிவி காணொளிகள் காவல்துறையினரினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.
காவல்துறையினரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, தலைமறைவாகியிருந்த இருவரில் ஒருவர் கிளிநொச்சியில் வைத்து நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கொக்குவிலைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டார்.
“இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவேண்டும். இந்தக் கொலையின் பின்னணி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் சந்தேகநபர் காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும்” என்று காவல்துறையினர் விண்ணப்பம் செய்தனர்.
காவல்துறையினரின் விண்ணப்பத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த சந்தேகநபரின் சட்டத்தரணி வினோராஜ், பிணை வழங்க மன்றுரைத்தார்.
இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.பீற்றர் போல், கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்த காவல்துறையினரை அறிவுறுத்தியதுடன், சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை நாளைமறுதினம் வரை ஒத்திவைக்கப்பட்டது. #கோண்டாவில் #இரும்பகஉரிமையாளர் #தடுப்பு
Spread the love