இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ? நிலாந்தன்

பேரவையால் தொடக்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த பொழுது அது தமிழ் அரசியற் சூழலையும் தென்னிலங்கையின் அரசியற் சூழலையும் சடுதியாகக் குழப்பியது. அப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏன் அப்படி அதிர்வுகள் ஏற்பட்டன?

ஏனெனில் அவ்வாறு சிவில் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தலையீடு செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னைய காலங்களைப் போல கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்க மாட்டார்கள் என்ற ஒரு செய்தியை தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் நாட்டிலுள்ள தூதரகங்களுக்கும் அது உணர்த்தியது. தமிழ் வாக்குகள் எனப்படுபவை மஹிந்தவுக்கு எதிராக விழுபவை. எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவானவை என்றுதான் தென்னிலங்கையில் உள்ள பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுயாதீன குழுவானது ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கேட்ட பொழுது எல்லாருமே உற்றுக் கவனித்தார்கள்.

முதல் முதலாக ஒரு சிவில் அமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பேரத்தை முன்வைக்க வேண்டும் என்று கிளம்பிய பொழுது அது பலருக்கும் உதைப்பைபைக் கொடுத்தது. இதுவரை காலமும் தமிழ் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு வாங்கிக் கொடுத்த கூட்டமைப்பு அதைத் தொடர்ந்தும் செய்வதற்கு எதிராகக் கேள்விகள் எழுந்தன. தமிழ் மக்களின் வாக்குகள் தனக்குத்தான் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச அதனால் பதட்டம் அடைந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்த முற்படும் எவரும் மறைமுகமாக கோத்தபாயவுக்கு ஆதரவானவர்கள் என்று கூறினார்.

அதேசமயம் கோத்தபாயவை தோற்கடித்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று திட்டமிடும் வெளித் தரப்புக்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படுவதை விருப்பத்தோடு பார்க்கவில்லை. ஏனெனில் தமிழ் வாக்குகள் கேள்விக்கு இடமின்றி சஜித் பிரேமதாசவிற்கு கிடைப்பதை ஒரு பொது வேட்பாளர் நிபந்தனைகளுக்கு உள்ளாக்கி விடுவார் என்று அவை சிந்தித்தன.

அதாவது ஒரு தமிழ் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் முன்னிறுத்த்தி ஒரு பேர அரசியலை முன்னெடுக்க முற்பட்ட போது அதற்கு தமிழ்த் தரப்பில் பெரிய கட்சிகள் தயாராக இருக்கவில்லை. தென்னிலங்கையில் அது அதிர்வுகளை ஏற்படுத்தியது. இலங்கையை யார் ஆள வேண்டும் என்பதனை தீர்மானிக்கப்பட்ட முற்பட்ட வெளித் தரப்புக்களும் அதை விருப்பத்தோடு பார்க்கவில்லை. முடிவில் சுயாதீன குழுவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதாவது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை களமிறக்க முடியவில்லை. இப்பொழுது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளருக்கான வாய்ப்புக்கள் ஒரு சிவாஜிலிங்கமாக சுருங்கி விட்டன.
இவ்வாறு சுயாதீன குழுவானது அதன் முயற்சியில் இறுதி வெற்றி பெறாமல் இருக்கலாம். ஆனால் அது மிகத் தெளிவான செய்திகளை தமிழ் கட்சிகளுக்கும் சிங்கள கட்சிகளுக்கும் வெளித் தரப்புகளுக்கும் உணர்த்தியது.

முதலாவது செய்தி தமிழ் மக்கள் பேரம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள் என்பது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் தலைவர்கள் பேரம் பேசக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தாது விட்டார்கள். ஆனால் முதல் தடவையாக ஒரு சிவில் அமைப்பு பேர அரசியலைச் செய்யுமாறு தமிழ் கட்சிகளை கோரும் ஒரு நிலைமை தோன்றியது. இது இனிமேலும் பேரம் பேசாமல் அரசியலை முன் கொண்டு செல்ல முடியாது என்ற செய்தியை தமிழ் கட்சிகளுக்கு உணர்த்தியது.

குறிப்பாக கூட்டமைப்பு கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக பேரம் செய்யக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் ரணிலுக்குச் சாதகமாக பயன்படுத்தியது. இனிமேலும் அவ்வாறு அரசியல் செய்ய முடியாது என்பதனை சுயாதீன குழு உணர்த்தியிருக்கிறது.

இரண்டாவது செய்தி தென்னிலங்கை மைய கட்சிகளுக்கு உரியது. தமிழ் வாக்குகளை நிபந்தனைகள் இன்றி பெற முடியாது என்ற ஒரு நிலை மெல்ல தலையெடுக்கிறது என்ற செய்தி மிகக் கூர்மையாக அங்கு சென்றடைந்துள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்றால் இனவாதத்தோடு மோத வேண்டும் அல்லது இனவாதத்தை கனியச் செய்ய வேண்டும். இவை இரண்டையும் செய்யத் தயாரற்ற எந்த ஒரு தலைவரும் இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வை தரப்போவதில்லை.

இந்நிலையில் சிங்கள பௌத்த பெருந் தேசிய வாக்குகளை கவர்வதற்காக தமிழ் மக்களுக்கு எதையும் கொடுக்க விரும்பாத தலைவர்களோடு தமிழ் மக்கள் எப்படி பேரம் பேசுவது? அது பேரமா? அல்லது வழிஞ்சோடி அரசியலா? தமது பேரம் பேசும் பலம் எதுவென்பதை தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்களுக்கு கூர்மையான விதத்தில் உணர்த்துவதே ஒரே வழி. அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு சிறந்த களம். அதை தமிழ் மக்கள் தமது ஆணையை வெளிக் கொண்டு வருவதற்கான மறைமுக வெகுசன வாக்கெடுப்பாக பயன்படுத்தலாம்.அதேசமயம் தென்னிலங்கையில் பேரம் பேசுவதற்கான ஒரு களமாகவும் அதை பயன்படுத்தலாம்.

இம்முறை தமிழ் மக்கள் மஹிந்தவை தோற்கடிப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதில்லை எந்த ஒரு செய்தியை தமிழ் பொது வேட்பாளருக்கான தேடல் உணர்த்தியுள்ளது.

மூன்றாவது செய்தி வெளிநாடுகளுக்கு உரியது. சஜித் பிரேமதாசவை வெல்ல வைக்க வேண்டும் என்று திட்டமிடும் நாடுகள் தமிழ் மக்களோடு பேரம் பேச வேண்டிய நிர்பந்தத்தை ஒரு தமிழ் பொது வேட்பாளர் அதிகப்படுபடுத்துவார். இதன் மூலம் தமிழ் மக்கள் சிங்கள அரசியல்வாதிகளுடன் உடன்படிக்கைகளை செய்ய முடியாது போனாலும் அவ்வரசியல்வாதிகளை பின்னிருந்து தீர்மானிக்க முயலும் நாடுகளிடம் ஏதாவது பாதுகாப்பு பொறிமுறையை கோரலாம்.

எனவே ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முடியாது போனாலும் கூட சுயாதீனக் குழுவானது தமிழ் அரசியலையும் தென்னிலங்கை அரசியலையும் மிகக் குறுகிய காலத்தில் குளப்பியிருக்கிறது.
சுயாதீன குழுவில் நடவடிக்கைகளுக்குச் சற்று பின்னாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் களத்தில் குதித்தது. கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தையும் இணைத்துக் கொண்டு அவர்கள் ஒரு புதிய முயற்சியை தொடங்கினார்கள். அது ஏறக்குறைய சுயாதீனக் க்குழுவின் நடவடிக்கைகளுக்கு சமாந்தரமானது. ஒருவிதத்தில் அது சுயாதீன குழுவுக்கு பக்கபலமானது. கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களும் மாணவ அமைப்புக்களும் இவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிப்பது என்பது ஜனநாயகமான ஒரு முன்னேற்றம்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எல்லா கட்சிகளையும் ஒரு மேசையில் கொண்டு வந்து சேர்த்தது. எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான கோரிக்கைகளை தென்னிலங்கை நோக்கி முன்வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கேட்கிறார்கள். கட்சிகளும் அதற்கு சம்மதித்தன. கட்சிகள் ஏற்கனவே எப்படிப்பட்ட கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் என்பது குறித்து சிந்தித்து வைத்திருந்தன. அக்கோரிக்கைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு பொது கோரிக்கையாக மாற்றி அதுதான் தென்னிலங்கையில் முன்வைக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான சந்திப்புக்களை மூலம் சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதில் பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் ஒரு தேர்தலை முன்வைத்து தமிழ்த் தரப்புக்கள் இவ்வாறு ஒன்றிணைக்கப்படுவது மிகவும் அரிது.

அவ்வாறு ஒன்றிணைக்க தக்க பலம் முன்னாள் மன்னார் ஆயரிடம் இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியப் பேரவை என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஊக்குவித்தார். ஆனால் அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இப்பொழுது மறுபடியும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் கட்சிகள் எந்த அளவுக்கு இதில் தொடர்ச்சியாக ஒத்துழைக்கும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும.;; ஜனாதிபதி தேர்தலை தனித்தனியாக அணுகக்கூடாது என்ற ஒரு நிலையை பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்படுத்துவர்களாக இருந்தால் அது ஒரு பெரிய வெற்றி. அதிகளவு மக்கள் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் ஒரு கட்சி ஏனைய கட்சிகளை கலந்தாலோசிக்காமல் வாக்களித்த மக்களுக்கும் கூறாமல் தென்னிலங்கையோடு நிபந்தனைகள் இன்றி சமரசம் செய்யக்கூடிய நிலைமைகளை இவ்வாறான முயற்சிகள் தடுக்குமா?

அவ்வாறு தடுத்தால் அது பெரிய வெற்றிதான். 2016 இல் மன்னாரில் அம் மாவட்டத்தின் முன்னாள் மறை மாவட்ட ஆயர் முன்னிலையில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்த போது ஆயர் சம்பந்தரை நோக்கி விமர்சன பூர்வமாக கருத்துக்களை முன் வைத்தார். அப்பொழுது சம்பந்தர் என்ன சொன்னார்? ‘நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் ஆனால் கடைசியில் முடிவெடுப்பது நான்தான்’ என்றுதானே சொன்னார்? இப்பொழுதும் அப்படிக் கூறப்படுமா?

உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த படிப்பினைகளின் பின்னணியில் கடந்த ஐந்து ஆண்டுகால அரசியலில் கிடைத்த படிப்பினைகளின் பின்னணியில் குறிப்பாக கடந்த ஒக்ரோபர் மாதம் நிகழ்ந்த ஆட்சிக் குளப்பத்திற் கிடைத்த படிப்பினைகளின் பின்னணியில் தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை தமிழ் மக்கள் பேரவை நியமித்த சுயாதீனக் குழுவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் உருவாக்கியுள்ளன. # ஜனாதிபதிதேர்தல்  #சுயாதீனக் குழு  #பல்கலை #தலையீடு

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 14 other subscribers