சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 595 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாத்து வருகின்றது.
சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது தாக்குதல்கள் நடத்தி வந்தது.
இந்த தனி நாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சியை இல்லாது செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.
இந்தநிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் உத்தரவில் அந்நாட்டு ராணுவம் அமைதி வசந்தம்’ என்ற பெயரில் சிரியாவுகுள் அத்துமீறி நுழைந்து குர்திஷ் போராளிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகளும் பதிலடி கொடுத்து வருகின்ற போதும் துருக்கியின் பலமான தாக்குதலுக்கு பயந்து லட்சக்கணக்கான குர்திஷ் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் கடந்த ஒக்டோபர் 9 முதல் கடந்த ஒரு வாரம் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 595 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து குர்திஷ்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரிய நாட்டின் அரசபடைகள் எல்லைப் பகுதிக்கு விரைந்துள்ளதனால் சிரியா மற்றும் துருக்கி இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது #துருக்கி #தாக்குதல் #குர்திஷ் #போராளிகள் #பலி