கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது.
கொடூர குணமுடைய ஒருவரே பெண்ணை கொலை செய்துள்ளதாகவும், அவர்பெண்ணை இழுத்துச் சென்று உடையை அகற்றி, வயிற்றுப் பகுதியில் நெருப்புத் தனல் உடைய கட்டையால் சூடு வைத்து பெரும் சித்திரவதை செய்துள்ளார் என்றும் நீதி விசாரணைகளில் தெரியவந்தது. வயோதிபப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புகள் என்பனவும் கொலைகாரர் அபகரித்துச் சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் தனிமையில் வசித்த வயோதிப பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
அதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 61 வயதுடைய புண்ணியானந்தம் சந்திராதேவி என்ற வயோதிபப் பெண்ணே வெட்டுக் காயங்களுடன் வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளதுடன் மற்றையவர் ஆசிரியர் என்றும் நீர்வேலியில் வசித்து வருகின்றார் என்றும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கூரிய ஆயுதத்தையும் யாழ்ப்பாணம் தடவியல் காவற்துறையினர் மீட்டனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் நீதிவான் அ.பீற்றர் போல், சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதன் ஆகியோர் நீதி விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனையடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பெண்ணின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிவான், சட்ட மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.–
கோண்டாவிலில் வயோதிப பெண் கொலை….
கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்தனர். 61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு இன்று திங்கட்கிழமை காலை வீட்டு வளவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்று இருக்கலாம் தெரிவிக்கும் காவற்துறையினர், கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.–