இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் கொள்கலன் பாரவூர்தியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட உயிரிழந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் தனது தாயாருக்கு கடைசி செய்தி அனுப்பியுள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது
கடந்த புதன்கிழமை அதிகாலை ஈஸ்டர்ன் அவென்யூ எனும் இடத்தில் உள்ள வாட்டர் கிலேட் தொழிற் பூங்காவில் 39 இறந்த உடல்கள் அடங்கிய கொள்கலன் பாரவூர்தி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்களில் 31 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் அடங்குகின்றனர்.
மேலும் அந்த கொள்கலன் பாரவூர்தியின் சாரதியான 25 வயதான வடக்கு அயர்லாந்து நாட்டவர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 39 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 3 பெண்கள் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் ட்ரே மை என்ற 26 வயதுடைய பெண்ணாக இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் ட்ரே மை பாரவூர்தியில் மூச்சுத்திணறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் தனது தாயாருக்கு செல்போன் மூலம் செய்தி அனுப்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பெண் உயிரிழப்பதற்கு முன்னர் தனது தாயாருக்கு அனுப்பிய செய்தியில், ‘என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா… வெளிநாட்டில் குடியேற நான் தேர்ந்தெடுத்த பாதை வெற்றியடையவில்லை. அம்மா நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நான் செத்துக்கொண்டு இருக்கிறேன். என்னால் மூச்சுவிட முடியவில்லை…. நான் வியட்நாமை சேர்ந்தவள்…. என்னை மன்னித்து விடுங்கள் அம்மா’ என செய்தி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #இங்கிலாந்தில் #பாரவூர்தி #உயிரிழந்த #பெண் #இறுதிச்செய்தி