கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வெடிக்காத புதிய கைக்குண்டு மீட்கப்பட்ட நிலையில் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி சேனைக்குடியிருப்பு பாண்டிருப்பு வீதியை இணைக்கும் சந்திக்கு அருகாமையில் திங்கட்கிழமை (28.10.19) காலை குறித்த புதிய கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
வீதியோரத்தில் பயணம் செய்த நபர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இப்புதிய கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டு இயக்கப்பட்டுள்ளதுடன் வெடிக்கும் நிலையில் காணப்படுவதனால் பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகள் காவற்துறையினரால் போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற கல்முனை காவற்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டு இராணுவத்தினரும் வெடி குண்டு செயலிழக்கும் படையினரும் சம்பவ இடத்தில் செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை (27.10.19) நள்ளிரவு நற்பிட்டிமுனை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்கள் நடமாடுவதாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
எனினும் சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை ஆனால் குறித்த பகுதியில் கைக்குண்டொன்று வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளது.மேலதிக தேடுதலுக்காக குறித்த பகுதிக்கு வந்த காவற்துறையினர் சம்பவ இடத்திற்கருகே உள்ள பற்றைக்குள் இருந்து பணப்பை ஒன்றை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட பணப்பையை அடிப்படையாக வைத்து சந்தேகத்தில் அதே பகுதியை சேர்ந்த 23 வயதினை உடைய இளைஞனை கல்முனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதான இளைஞனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவரது வீடு அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட விசேட தடயவியல் காவற்துறையினரால் மோப்பநாயின் உதவியுடன் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
மேலும் நேற்று நள்ளிரவு அவ்வீதியால் சென்ற முச்சக்கரவண்டி சாரதியான நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த இளைஞனை அப்பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படும் குறித்த ஆயுததாரிகள் தாக்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு ஒன்றை வழங்குவதற்காக கல்முனை காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக கல்முனை காவற்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்