பொறுப்பற்ற வகையில், உரிய பொறிமுறைகள் இன்றி காலாவதியான மருந்துகள் , குளிசைகளை வடமாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் தீ மூட்டி அழிக்க முற்பட்டமையால் அயலில் இருந்த பொதுமக்கள் ஓவ்வாமைக்கு உட்பட்டதுடன், பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர், யாழ்.பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் காலவதியான மருந்து பொருட்களை பிளாஸ்ரிக் போத்தல்களுடன் பாரிய குழி தோண்டி அதனுள் போட்டு நேற்று திங்கட்கிழமை இரவு தீ மூட்டியுள்ளனர்.
அதனால் பிளாஸ்ரிக் போத்தல்கள் எரிந்தும் , மருந்துகள் எரிந்தும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் தூர்நாற்றம் வீசியதுடன் அயலவர்களுக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர்.
அதனை அடுத்து அது தொடர்பில் யாழ்.மாநகர சபையின் , தீயணைப்பு படைக்கும் அறிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் தீயினை அணைக்க முற்பட்ட போது அவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டது. அதன் மத்தியிலும் பலத்த சிரமத்தின் மத்தியில் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரனை கேட்ட போது, வளாகத்தில் மருந்து பொருட்களை எரியூட்டி அழிக்க அனுமதிக்கவில்லை. அவற்றை உரிய முறையில் எரியூட்டி அழிக்க உரிய இடத்திற்கு அனுப்பி வைக்குமாறே பணிக்கப்பட்டது. அந்த நிலையில் மருந்தாளர் ஒருவரின் எதேச்சைகரமான முடிவினால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
அதேவேளை சம்பவம் தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரிகளிற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவர்கள் நிலைமை தொடர்பில் அவதானித்தத்துடன் , உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தனர்.