பிரதான கட்சிகள் மீதான விரக்தியில் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது பற்றி சிறுபான்மை சமூகம் சிந்திக்க முடியாது. இதன்மூலம் வாக்குகள் வீணடிக்கப்படுவதுடன், எதிரணி வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சிறுபான்மை சமூகம் இவ்வாறானதொரு தவறை செய்யமுடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) திருகோணமலை, கிண்ணியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;
ஏப்ரல் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பற்ற சூழல், அவதூறு குற்றச்சாட்டுகள், முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் என நாலாபுறங்களிலும் பலவிதமான நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியது.
இத்தகைய இக்கட்டான சூழலுக்கு எமது சமூகத்தை ஆளாக்கிய தரப்பை வெற்றபெறச் செய்வதற்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா என்று சிந்தியுங்கள். இந்த ஜனாதிபதி தேர்தலானது முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவாலான தேர்தல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
குருநாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டுகளினால் பின்னணியிலிருந்த கும்பல்கள் இப்போது எந்த தரப்பில் சங்கமித்திருக்கின்ற என்று பாருங்கள். இந்த சூழலில் எங்கள் மத்தியில் வேறொரு தெரிவு இருக்கமுடியாது. ஆகவே, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நாங்கள் அனைவரும் ஒருமித்து தெரிவுசெய்த புதிய யுகத்தின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம்.
1988ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியான பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தற்போது சஜித் பிரேமதாச களமிறங்கியிருக்கிறார். நாங்கள் இவரை வேட்பாளராக பெயரிட்டமை குறித்து சிறுபான்மை கட்சிகள் என்றவகையில் பெருமை கொள்கிறோம்.
கடந்த அரசாங்கம் தொட்டு இன்றுவரை சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் உத்தரவாதமளிக்கலாம் என்ற திடமான நம்பிக்கையில்தான் நாங்கள் அவருடன் இந்தப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.
பிரதான கட்சிகள் மீதான விரக்தியின் அடிப்படையில் சிலர் மாற்றுக்கட்சிக்கு வாக்களிப்பது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். பிரதான வேட்பாளர்களில் ஒருவர் 50% வாக்குகளை பெறாவிடின், மூன்றாவது வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகிவிடும். சிறுபான்மை சமூகம் இவ்வாறானதொரு தவறை செய்யமுடியாது.
எமது விரக்தியை காட்டுவதற்காக மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களிப்பது தேர்தல் உக்தியல்ல. இத்தகைய செய்கையினால் தப்பித்தவறியாவது மாற்றுத் தரப்பு வென்றுவிட்டால், நாங்கள் இந்த மண்ணில் அடிமைகளாக வாழ்வதற்கு தயாரா என்பது குறித்து சிந்தித்துக்கொள்ளுங்கள்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஜனாதிபதி தேர்தல் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கும் போட்டி: வவுனியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இந்த ஜனாதிபதி தேர்தலானது நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கின்ற பாரிய போட்டியாகும். வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்களமாக பயன்படுத்துகின்ற கும்பலுக்கு எதிராக மக்கள் தங்களது வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) வவுனியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;
கடந்த அரசாங்கத்தில் பெருந்தொகையானோர் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டனர். இவர்களை கண்டுபிடிப்பதற்கு எவ்விதமான பொறிமுறைகளும் இல்லாமல் அவர்களின் அப்பாவி உறவினர் செய்வதறியாது தவித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனத்தின் உத்தரவின் பிரகாரம் காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளோம்.
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆணைக்குழுவில் பதிவுசெய்ய முடியும். இதன்மூலம், காணாமலாக்கப்பட்டோரை கண்டறியும் விதத்தில், அவர்களது குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் வழங்கப்படும். அத்துடன் இழப்பீடுகளை வழங்கவும் அவர்களின் குடும்பத்துக்கு மறுவாழ்வாழ்வு அளிக்கவும் இதன்மூலம் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களை மீளமைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது. அதுமட்டுமன்றி, தனிப்பட்ட வன்மங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல், அட்டூழியங்கள், அட்டகாசங்கள் இனியும் தொடராமல் தடுப்பதற்கான உத்தரவாதங்களை தற்போதைய அரசாங்கத்தினால் சட்டமூலமாக அமுல்படுத்தியுள்ளோம்.
நாட்டின் இளம் சந்ததியினருக்கு புதிய உற்சாகத்தையும், உற்வேகத்தையும் உருவாக்குகின்ற இளம் தலைவராக நாங்கள் சஜித் பிரேமதாசவை களமிறக்கியுள்ளோம். இதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, சகவாழ்வை விரும்பும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அவருக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றனர். இதைவிட பெரியதொரு ஆறுதலை மக்கள் அடையப் போவதில்லை.
வெளிநாட்டு சக்திகளுக்கு சோரம்போகாத இலங்கையை உருவாக்கி புதிய யுகமாற்றத்தை உருவாக்குவதற்கு நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்களமாக பயன்படுத்துகின்ற கும்பலுக்கு எதிராக, நேர்மையான, சகல இனங்களுக்கும் நிம்மதியான வாழ்வை தரக்கூடிய தலைவராக சஜித் பிரேமதாசவை அடையாளம் கண்டிருக்கிறோம்.
இந்த ஜனாதிபதி தேர்தலானது நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கின்ற போட்டியாகும். சிறுபான்மை மக்களை துச்சமாக மதித்து, யுத்தம் என்ற போர்வைக்குள் அவர்கள் ஏற்படுத்தி கெடுபிடிகள் யுத்த முடிவின் பின்னரும் தீர்ந்தபாடில்லை. தொடர்ச்சியான பாய்ச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் கும்பலுக்கு நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க முடியாது.
சிறுபான்மை தலைமைகள் ஒருமித்து உருவாக்கியுள்ள சஜித் பிரேமதாச மீது நீங்கள் வைக்கம் நம்பிக்கை, உங்களிடமிருந்து வருகின்ற உற்சாக்கத்தின் மூலம் வெளிப்படுகின்றது. இந்த தேர்தல் உங்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக கருதி, ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்யவேண்டும்.
அடிக்கடி வரட்சியினால் பாதிக்கப்படும் வன்னி மாவட்டத்துக்கு, நான் அமைச்சை பொறுப்பேற்றதிலிருந்து பல குடிநீர்த் திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் மூலம் பேராறில் பாரிய நீர்த் தேக்கத்தை உருவாக்கி, அதிலிருந்து வவுனியா உட்பட சுற்றுப்புறத்திலுள்ள பல நகரங்களுக்கும் நீரை பகரிந்தளிக்கின்ற முயற்சியில் நாங்கள்வெற்றி கண்டுள்ளோம்.
அது மட்டுமன்றி, நீரை கொண்டுசெல்ல முடியாத பிரேதசங்கள் அனைத்துக்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியுள்ளோம். மல்வத்து ஓயாவில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்து, அப்பிரதேசத்தில் நீர்ப்பாசனம் வழங்குவதுடன், வன்னியில் நீர் வழங்கல் திட்டத்தை நிறைவுசெய்யும் கட்டத்தில் இருக்கின்றோம். அதேபோல் பாகற்குளத்தை அண்டிய சகல பிரதேசங்களுக்கும் நீரை கொண்டு செல்லக்கூடிய திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
வரட்சியினால் பாதிப்படைகின்ற பல இடங்களுக்கு பாரிய நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டு, நீர் வழங்கல் திட்டங்களையும் நீர்ப்பாசனத் திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளோம். கல்வித் துறையிலும் இந்த அரசாங்கம் பாரிய யுகமாற்ற புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த அரசாங்கத்திலும் இல்லாதவாறு இந்த அரசாங்கத்தின் மூலம் அபிவிருத்திகளுக்கு பாரிய நிதியொதுக்கீடுகளை செய்திருக்கிறோம் என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான மனோ கணேசன், றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், வவுனியா நகர சபை உறுப்பினர் முனவ்வர், வென்கல செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் மாஹிர் உட்பட கட்சியின் வன்னி மாவட்ட ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்