Home இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு….

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு….

by admin

30-10-2019
ஊடக அறிக்கை
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா?

இலங்கைத்தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதாகும். அந்த நோக்கில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தீரக்கமான முடிவுகளை எடுத்து பேரம்பேச வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் ஏற்கனவே தமது உத்தியோகபூர்வமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச – ‘தமிழர் நலன்கள் சார்ந்து முன்வைக்கப்படுகின்ற எந்தவொரு நிபந்தனையையும் ஏற்கமாட்டேன்’ என்றும், ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிறேமதாசா ‘தமிழர் தரப்புடன் எந்தவொரு உடன்படிக்கைக்கும் செல்லமாட்டேன்’ என்றும் கூறி தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளியுள்ளனர்.

குறிப்பாக ஒற்றையாட்சித் தீர்வைத் தவிர வேறு எதற்கும் தாம் இணங்க மாட்டோம் எனவும், ஏற்கனவே உள்ள ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் மட்டுமே தமக்கு உண்டெனவும் வேண்டுமானால் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பரவலாக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர். சமஸ்டி என்பதனை அடியோடு நிராகரிப்பதாகவும் அனைத்துத் தரப்புக்களும் கூறியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இது ஓர் சிங்கள பௌத்த நாடு என்பதனையும் அதன் அடையாளத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் தாம் செயற்படுவோம் எனவும் சிறீலங்கா படைத்தரப்புக்கள் போர் வீரர்கள் என்றும் அவர்களை எந்தவொரு நீதிமன்றின் முன்னாலும் நிறுத்த மாட்டோம் என்றும் அவர்களைப் பாதுகாப்பது தங்களது தார்மீகக் கடமை என்றும் அவர்களது கௌரவத்தை தாம் நிலைநாட்டுவோம் என்றும் கூறியுள்ளனர்.

மேற்படி கொள்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்தும்போது தமிழ்த் தேசத்தின் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பு மேலும் தீவிரமடையும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இந்தக் கொள்கைப் பிரகடனங்கள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்; மக்களாகிய நாம் இத்தேர்தலில் இவர்களுக்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் அடைந்துவிடப்போவதில்லை என்பது வெளிப்படையானது.

இந்நிலையில் இத்தேர்தலில் கலந்துகொண்டு மேற்குறித்த நிலைப்பாடுகளையுடைய பிரதான வேட்பாளர் எவருக்காவது வாக்களிப்பதானது தமிழ்த் தேசம் தனது அடிப்படை நிலைப்பாடுகளைக் கைவிட்டு சிங்கள பௌத்தத்தினுள் கரைந்து செல்லத் தயார் என்பதான தவறான செய்தியை உலகத்திற்கு வழங்குவதாக அமையும்.
இப்பின்னணியிலே ஈழத் தமிழ்த் தேசம் இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதே தவிர மாற்று வழிகள் எதுவுமே கிடையாது. எனவே இவ் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை கோருகின்றோம்.

புறக்கணிப்பை கைவிட்டு வாக்களிக்க வேண்டுமானால்!

தேர்தல் புறக்கணிப்பு முடிவை தமிழ் மக்கள் கைவிட்டு தமக்கு வாக்களிக்க வேண்டும் என யாராவது பிரதான வேட்பாளர்கள் விரும்புவார்களாக இருந்தால் அத்தரப்பும் அத்தரப்பினை ஆட்சிக்குக் கொண்டுவர விரும்பும் சர்வதேச வல்லரசுகளும் பின்வரும் கோரிக்கைகளை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தினரும், ஜனாதிபதி வேட்பாளர்களும் உத்தரவாதம் வழங்க வேண்டிய கோரிக்கைகள்..

1. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒற்றையாட்சி அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்படல் வேண்டும்.

2. தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தீவின் இணைந்த வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தேசம் என்பதனையும் அதன் தனித்துவமான இறைமையையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன் சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய சமஸ்டித் தீர்வை பெற்றுத்தருவதனை உறுதிசெய்ய வேண்டும்.

3. தமிழ்த் தேசத்தின் மீது இடம்பெற்ற மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக்குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

4. வடக்கு – கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் ஓர் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான நிதி நேரடியாகக் கிடைப்பதனை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.

5. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்படல் வேண்டும்.

6. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.

7. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.

8. சிறீலங்கா ஆயுதப்படைகள் மீதான போர்க்குற்றம், இனவழிப்புக் குற்றம் தொடபான விசாரணைகள் முடியும் வரையில் – சிறீலங்கா இராணுவம் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும்.

9. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன்னர் இருந்ததுபோல தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

10. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

11. வடக்கிற்கு மகாவலியை திசை திருப்புதல் என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இயங்குவதால் அச்சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல் வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்.

12. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் வன்னிப்பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

13. தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் ஊடாக நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ்கள் (வர்த்தமானி அறிவித்தல்கள்) இரத்துச் செய்யப்படல் வேண்டும்.

14. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும்.

15. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்புக்களில் அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்;கப்படல் வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More