(file photo)
வடமாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தினுள் உள்ள கிணற்று நீரில் மருந்து வாடை வீசியதனை அடுத்து கிணறு இறைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தினுள் காணப்பட்ட கிணற்று நீரில் இருந்து மருந்து வாடை வீசியதனை அடுத்து அது தொடர்பில் சுகாதார திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனை அடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிணறு இறைத்து சுத்தம் செய்யப்பட்டது.
குறித்த கிணற்றுக்கு அருகில் காலாவதியான குளுக்கோஸ் (சேலைன்) உள்ளிட்ட திரவ மருந்துவகைகள் அதிகளவில் நிலத்தில் ஊற்றப்பட்டு அவை அதனருகில் வைத்தே தீ மூட்டப்பட்டமையால் கிணற்று நீர் மாசடைந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சுதர்சன் சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அப்பகுதி கிணற்று நீரினை பார்வையிட்ட போது அயல் கிணறுகளில் அவ்வாறான நிலைமையை அவதானிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து அங்குள்ள மக்களுடன் நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த வாரம் குறித்த சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தினுள் காலாவதியான மருந்து பொருட்களை பிளாஸ்ரிக் போத்தல்களுடன் எரியூட்டியமையால் அயலில் வசிப்பவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதனை அடுத்து யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர் தீயினை கடுமையான போராட்டத்தின் மத்தியில் அணைத்திருந்தார்கள்.
அவ்வாறு மருந்து பொருட்கள் எரியூட்டப்பட்டமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுத்து வரும் நிலையில் , வாளகத்தில் உள்ள கிணற்றுக்கு அருகிலும் காலாவதியான மருந்துகளை நிலத்தில் ஊற்றப்பட்டமையால் கிணற்று நீர் மாசடைந்துள்ளது.
வடமாகாண சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயல் காரணமாக அயலவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் பொறுப்பற்ற செயல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #வடமாகாண #சுகாதாரஅமைச்சின் #பொறுப்பற்றசெயல் #பாதிப்பு