ஜனாதிபதி தேர்தல் 2019 தொடர்பில் தமிழர்களின் பலத்தை வெளிப்படுத்த வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 06 (ஆறு) கட்சிகளை இணைத்து ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க ஒரு பெரும் முயற்சி செய்தனர். இதில் 5 கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் 13 கோரிக்கைகளை முன்வைப்பதென ஒருமித்த முடிவை எடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல விடயங்களிலும் 5 கட்சிகளும் ஒருமித்து இணைந்தே கலந்துரையாடல்களில் கலந்துகொள்வது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதன் பொருட்டு ஆரம்ப நடவடிக்கைகளாக (1) மேற்படி 13 கோரிக்கைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்வது (2) அவ்வாறான சந்திப்புகளுக்கான நேர ஒதுக்கீடுகளை ஏற்பாடு செய்வது ஆகிய பணிகளை திரு.சுமந்திரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். தபால் மூல வாக்கெடுப்புக்கு மிகக்குறுகிய காலமே இருந்த காரணத்தால் மேற்படி பணிகள் இரண்டும் விரைவாக செய்யப்பட வேண்டியிருந்தது. எனினும் துரதிஷ;ட வசமாக குறித்த பணிகள் உரிய காலத்தில் நடைபெற எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. காலம் கடத்துவதிலேயே சிலர் கண்ணாக இருந்தார்கள். ஒக்டோபர் 28ந் திகதி ஐந்து கட்சிகளும் கூடிய போது திரு.மாவை சேனாதிராசா அவர்கள் 30ந் திகதிக்கு ஒத்தி வைக்கக்கோரி 30ந் திகதிக்கு ஐந்து கட்சிக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஒக்டோபர் 28ந் திகதி வரை 13 கோரிக்கைகளை ஆங்கில மொழிக்கு மாற்றக் கூட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
காலம் செல்லச் செல்ல தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்திற்கும் செயலாளர் நாயகத்திற்கும் நாளாந்தம் பல தொலைபேசி அழைப்புக்கள் தேர்தலுக்கு வாக்களிப்பது சம்பந்தமாக வழிகாட்டுதல்கள் கேட்டு மக்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்தன. இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் செயலாளர் நாயகம் அவர்கள் அன்றிருந்த நிலையையும் தபால்மூல வாக்களிப்பு தொடங்குவதற்கு ஒரு சில தினங்களே இருந்த நிலையையும் கருத்திற்கொண்டு உடனே 13 தமிழ் மூல கோரிக்கைகளை ஆங்கிலத்திற்குத் தாமே மொழிபெயர்த்து மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நேரடியாகவே தமது கட்சி சார்ந்த ஒருவரால் கையளித்து குறித்த 13 கோரிக்கைகளையும் பற்றி நேரடியாக வேட்பாளர்களுடன் பேச சந்திப்பை வேண்டியிருந்தார். இருவர் 13 கோரிக்கைகளையும் நிராகரித்து பத்திரிகையில் செய்தி அனுப்பினர்.
மூன்றாமவர் எதுவுமே பேசாதிருந்துவிட்டு பின்னர் 13 கோரிக்கைகளையும் நிராகரிப்பதாகப் பத்திரிகை மூலம் அறிவித்தார். இந்த நிலையில்த் தான் தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடாக தமிழ் மக்கள் இத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு முடிவை எமது செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார். இவ்வறிவித்தல் தபால் மூல வாக்களிப்பு நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அவசர அவசரமாக பத்திரிகைகளுக்கு அறிவிக்கப்பட்டது.
இக்கட்டான சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பு சில வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியதுடன் மாணவர்கள் முயற்சியிலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது மிகவும் துரதிஷ;டவசமானது. எமது கட்சி எல்லா சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றே கடுமையாக உழைத்து வந்தது. இதற்கு ஆதாரமாக திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தன்னைத் தனியாகச் சந்திக்கும்படி இரு தடவைகள் அழைப்பு விடுத்த போதும் கூட எமது கட்சியின் செயலாளர் நாயகம் அதனை நிராகரித்ததுடன் 5 கட்சிகளையும் அழைத்து பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும்படி அவரிடம் கோரியிருந்தார். அத்துடன் பகிரங்கமாக வெளியிட்;ட அவரின் அறிக்கையிலும் எக்காரணம் கொண்டும் தனியாக சந்திக்கப்போவதில்லை எனவும் 5 கட்சிகளும் இணைந்தே சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடாத்துவோம் எனவும் எமது செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார்.
மேலும் 5 கட்சிகள் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னருங் கூட சில கட்சிகள் யாழ்ப்பாணத்தில் நடந்த சில அரச, அரசியல் கூட்டங்களில் பங்குபற்றியதும் ஐ.தே.க வேட்பாளரின் தேர்தல் பரப்புரைத் துண்டுப்பிரசுரங்களை ஏந்தியிருந்ததும் தனிப்பட்ட முறையில் சில சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே. இந்த பின்னணியில்த்தான் திரு.சுமந்திரன் அவர்கள் தானாகவே வலியவந்து பொறுப்பேற்றுக் கொண்ட விடயங்களை செய்யாதிருந்தமை பார்க்கப்பட வேண்டும்.
எது எப்படியிருப்பினும் தமிழ் மக்கள் கூட்டணியின் அறிக்கையைப் பல்கலைக்கழக மாணவர்களோடு பகிர முடியாமல் போனதற்குக் காரணம் நேரமின்மையே. அவ்வாறான இக்கட்டுக்குள் நாம் தள்ளப்பட்டோம் என்பதை சூழலை ஒட்டி யாவரும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம்.
மேலும் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பக்கச்சார்பற்ற முயற்சி மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டதை தமிழ் மக்கள் கூட்டணி பாராட்டுகின்றது. அவர்கள் முயற்சி காலத்தின் தேவை கருதி எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு எமது பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்கும்.
ஊடகப் பிரிவு
தமிழ் மக்கள் கூட்டணி
யாழ்ப்பாணம்