தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சி பாடல்களை ஒலிபரப்ப முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் கல்முனை காவல்துறையினரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஸவை ஆதரித்து இறுதி பிரசார கூட்டம் ஒன்றினை புதன்கிழமை(13) தமிழ் தேசிய கூட்டமைப்பு மாலை 3 மணியளவில் ஏற்பாடு செய்திருந்த நிலையில் மக்கள் எவரும் குறித்த நேரத்திற்கு வருகை தராமையின் காரணத்தினால் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின் படி விடுதலைபுலிகளின் புரட்சி பாடல் திடிரென ஒலிபரப்ப பட்டது.
இதன் போது கல்முனை காவல்துறையினருக்கு குறித்த விடயம் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் சந்தேகத்தில் குறித்த கூட்டத்திற்கு ஒலிபரப்பு ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
குறித்த கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த ரெலோ இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தற்போது சந்தேகத்தில் கைதான இளைஞனை மீட்கும் முயற்சியில் கூட்டத்தினை ஒழுங்குபடுத்தியவர்கள் காவல்துறையினருக்கு பல்வேறு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். #விடுதலைப்புலிகள் #கல்முனை #தமிழ்தேசியகூட்டமைப்பு