Home இலங்கைநேரகாலத்துடன்  வாக்குகளை போடுங்கள்

நேரகாலத்துடன்  வாக்குகளை போடுங்கள்

by admin

நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்கள் வாக்குக்களை போடுங்கள் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயக உரிமை. இந்த உரிமையை மக்கள் அனைவரும் எவரின் கட்டாயமுமின்றி தெளிந்த மனதுடனும் தீர்க்கமான முடிவுடனும் பயன்படுத்த வேண்டும்.

தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்றோ அல்லது தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ ஜனநாயக சூழலில் யாரையும் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. தேர்தலைப் புறக்கணிப்பதால் இழப்படையப் போவது தேர்தலைப் புறக்கணிப்பவர்களே அன்றி வேறுயாருமல்ல.

ஒருபோதும் வெல்ல மாட்டார்கள் எனத்தெரிந்தும் அவர்களை களத்தில் இறக்கி வாக்குக்களை சிதறடிக்க பல வேட்பாளர்களை களமிறங்குவது தேர்தல் இராஜதந்திரம் எனக்கருதப்பட்டாலும் இலங்கை நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தையும் விரும்பாதவர்களின் செயற்பாடகவே இது கருதப்பட வேண்டும்.

அரசியற் கட்சிகளும் ஊடகங்கள் கருத்துருவாக்கும் பணியில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளப்படலாம். அந்த கருத்துருவாக்கத்தில் இருந்து மக்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என்ற நல்ல முடிவுகளை எடுக்க உதவலாம். நேரடியாகவே இவருக்கு வாக்களியுங்கள் என்றோ அல்லது இவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றோ வேண்டுவது சரியானதல்ல.

தமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் அறிக்கைகள் அனேக விடயங்களை எடுத்து சொல்லுகின்றன. எந்த தேர்தல் அறிக்கையிலும் வெளியிடப்பட்ட விடயங்கள் ஒருபோதும் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் இல்லை.

தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரத்தக்க நல்ல தலைவரை இனம் கண்டு தகுதியானவருக்கு வாக்களிங்கள் என்று தமிழ் மக்கள் அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இன்றுவரை தெரியப்படுத்தப்பட்ட கருத்துக்களை வைத்து நல்ல முடிவினை எடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். யார் இதய சுத்தியுடன் துணிவாக விடயங்களை நகர்த்துவார்கள் – பாரபட்சமின்றி தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்வார்கள் என்பதை தெளிவாக கணிப்பிட்டு வாக்களியுங்கள்.

நேரகாலத்துடன் தேர்தல் நிலையத்திற்கு சென்று பதற்றமின்றி நிதானமாக உங்கள் வாக்குக்களை செல்லுபடியான வாக்குகளாகப் போடுங்கள்.

எந்த அசம்பாவிதமுமின்றி தேர்தல் நடைபெறவும் இலங்கை நாட்டிற்கும் குறிப்பாக இலங்கை வாழ் தமிழ் மக்களிற்கும் நல்லதை செய்யக்கூடிய நல்ல தலைவர் தெரிவு செய்யப்படவும் இறையாசீர் வேண்டுகிறோம்- என்றுள்ளது.  #நேரகாலத்துடன்  #வாக்குகள்  #ஜனநாயக

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More