இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

அப்டேட் செய்யப்படாத தமிழ் வாக்குகள்? நிலாந்தன்…


இக்கட்டுரை வாசிக்கப்படுகையில் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிடும். அம் முடிவுகள் தொடர்பில் இக்கட்டுரை விவாதிக்காது. ஆனால் அம்முடிவுகளின் மீது தமிழ் வாக்காளர்கள் புத்தி பூர்வமாகத் தாக்கம் செலுத்தியிருக்க முடியும், செலுத்தியிருக்க வேண்டும் என்ற நோக்குக் கோணத்திலிருந்து இக்கட்டுரை எழுதப்படுகிறது. 2005 இல் புலிகள் இயக்கம் ஜனாதிபதித் தேர்தல் மீது அவ்வாறான ஒரு தலையீட்டைச் செய்தது. அதன் விளைவுகளே இன்று வரையிலும் இலங்கைத் தீவின் ஜனாதிபதித் தேர்தல்களில் தாக்கத்தைச் செலுத்துகின்றன.

2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தலைப் புறக்கணித்தது. அதன்மூலம் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ச அந்த இயக்கத்தை 2009 ஆம் ஆண்டு மே மாதம் தோற்கடித்தார். அந்த வெற்றியின் மூலம் அவர் இலங்கைத் தீவின் நவீனவரலாற்றில் வேறு எந்தக் குடும்பமும் பெற்றுக் கொடுக்காத ஒரு வெற்றியை சிங்கள மக்களுக்கு பெற்றுக் கொடுத்தார். அந்தவெற்றியை முதலீடாக கொண்டு அவர் யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்க தொடங்கினார். ராஜபக்ச பெற்றுக்கொடுத்த வெற்றியின் பிரகாசம் குறையும் வரையிலும் யுத்த வெற்றி வாதமும் தென்னிலங்கையில் கோலோச்சும்.

இவ்வாறு ஆயுதப் போராட்டத்தை நசுக்கிய ராஜபக்சவுக்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகள் திரும்பின. ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதை விடவும் யார் வரக்கூடாது என்று சிந்தித்து தமிழ் மக்கள் வாக்களிக்க தொடங்கினார்கள். இதன்படி 2009-ல் இருந்து தொடங்கி தமிழ் மக்கள் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின்போதும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக வாக்களித்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் வாக்களிப்பு மனோநிலை எனப்படுவது இப்படித்தான் இருந்து வருகிறது. இதனால் நன்மை அடையும் தரப்புக்கள் நான்கு முதலாவது ஐக்கிய தேசிய கட்சி. ராஜபக்ஷக்களுக்கு எதிரான வாக்குகளை தனக்கு ஆதரவான வாக்குகளாக அக்கட்சி அறுவடை செய்து வருகிறது .இம்முறையும் அறுவடை செய்யப் போகிறது.

இரண்டாவது கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலின் போது ராஜபக்சவுக்கு எதிராக விழும் வாக்குகளைத் தான் ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவாக விழுந்த வாக்குகளாக வியாக்கியானம் செய்து வருகிறது. இம்முறையும் அப்படித்தான் தேர்தலுக்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னரே ஐக்கிய தேசிய கட்சியைஆதரிக்கும் தனது நிலைப்பாட்டை கூட்டமைப்பு அறிவித்தது. அதை அறிவிக்கும் வரை பல்கலைக்கழக மாணவர்களையும் ஏனைய கட்சிகளையும் ஏமாற்றி ஒரு பொய்யான கூட்டை உருவாக்கி காலத்தை கடத்திய பின் முடிவில் நிலைப்பாட்டை கிட்டத்தட்ட இரண்டு கிழமைகளுக்கு முன் அறிவித்தது.

மூன்றாவது தரப்பு மேற்கு நாடுகள். நான்காவது தரப்பு இந்தியா. இவ்விரண்டு தரப்புக்களும் இலங்கைதீவில் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதில் அதிகரித்த ஆர்வத்தைக் காட்டுகின்றன. இலங்கைத்தீவின் ஜனாதிபதித் தேர்தல் எனப்படுவது உள்நாட்டில் ராஜபக்சக்களை எதித்து சஜித் மோதும் ஒரு களம் மட்டுமல்ல. அதற்கும் அப்பால் யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று ஆர்வம் காட்டும் சீனாவும் அமெரிக்க இந்திய கூட்டும் மோதும் ஒரு களமுமாகும்.இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் இச்சிறிய தீவு இதற்கு முன்னெப்பொழுதும் இந்தளவுக்கு சீன மயப் பட்டதில்லை. இவ்வாறு இலங்கைத் தீவு சீன மயப்படுவதை விரும்பாத அதை தடுக்க விரும்புகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றன. எனவே ராஜபக்ஷக்களுக்கு எதிரான தமிழ் மக்களின் கூட்டு மனோநிலை எனப்படுவது இது விடயத்தில் பேரரசுகளுக்கும் சாதகமானது.

இப்படிப் பார்த்தால் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் புறக்கணிப்பு ஒருபுறம் யுத்தத்தை வென்ற ராஜபக்ச குடும்பத்துக்கு முதலீடாக மாறியிருக்கிறது.அதேசமயம் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களின் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறா ஆதரவு வாக்குகளாக மாறியிருக்கின்றன.அதாவது 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் இயக்கம் தலையீடு செய்ததன் விளைவுகள் இலங்கைத்தீவின் அரசியலில் தொடர்ந்தும் செல்வாக்கு செலுத்துகின்றன.

இந்த அடிப்படையில் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் பெருமளவுக்கு மாறா நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.இக்கூட்டு மனோநிலையை தமிழ் கட்சிகளின் தலைவர்களும் உட்பட வெளித்தரப்புகளும் தமக்கு வசதியாக பயன்படுத்துகிறார்கள். மாறாக அதை தமிழ் நோக்கு நிலையிலிருந்து கையாண்டு எப்படி தமிழ்ப் பேரத்தை உயர்வாகத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று சிந்திப்பதற்கு தமிழ் கட்சித்தலைவர்கள் யாராலும் முடியவில்லை.

சாதாரண தமிழ் மக்கள் தமது கை பேசிகளையும் கணினிகளையும் ஏனைய இலத்திரணியல் பொருட்களையும் காலத்துக்குக் காலம் அப்டேட் பண்ணி வருகிறார்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தலின் போது தமது வாக்களிப்பு முறைமையை இந்தமுறையும் தமிழ் மக்கள் அப்டேட் பண்ணப் போவதாக தெரியவில்லை. அதைஅப்டேட் பண்ண வேண்டுமென்று தமிழ் கட்சித் தலைவர்களும் சிந்திப்பதாக தெரியவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கூட்டு மனோநிலையை அப்டேட் பண்ணுவது என்றால் என்ன? அக்கூட்டு மனோநிலையை கூட்டுப் பேரமாக மாற்றவேண்டும். 2009இல் தமிழ்ப் பேரம் ஒப்பீட்டளவில் தாழ்வாக இருந்ததுதான். ஆனால் 2015இல் நிலைமை மாறிவிட்டது. இந்தோ பசுபிக் மூலோபாய அரசியலுக்குள் தமிழ் வாக்குகள் கேந்திர முக்கியத்துவம் மிக்கவை என்பது அந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது.அதன் பின் கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக கொழும்பில் யார் ஆள வேண்டும் என்பதை பெரிதும் தீர்மானித்தது தமிழ் மக்களே. எனவே அந்தப் புதுப்பிக்கப்பட்ட அதாவது அப்டேட் செய்யப்பட்ட யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழ் வாக்குகள் அப்டேட் செய்யப்பட வேண்டும். யாருக்கு வாக்களிப்பது என்றாலும் அதை ஒரு வெற்று காசோலையாக நிபந்தனையின்றி வழங்கக் கூடாது. அவ்வாறு நிபந்தனை வைத்து ஆதரவை வழங்குவதென்றால் அதற்குப்பேரம் பேசும்அரசியலைக் கெட்டித்தனமாக முன்னெடுக்கத் தெரிய வேண்டும்.ஆனால் தமிழ்க்கட்சி தலைவர்களிடம் அப்படிப்பட்ட கெட்டித்தனமோ சாதுரியமோ தீர்க்கதரிசனமோ இல்லை.

அதனால்தான் இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பேரம் செய்யவில்லை. பேரம் செய்யவேண்டும் என்று கேட்ட சுயாதீன குழுவுக்கு கூட்டமைப்பும் ஏனைய பெரிய கட்சிகளும் பெருமளவுக்கு ஒத்துழைக்கவில்லை. தவிர சுயாதீனக் குழுவின் நகர்வுகளை ஒரு நெருக்கடியாக கருதிய கூட்டமைப்பு அதிலிருந்து தப்புவதற்கான ஒரு மார்க்கமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முன்னெடுப்பை தந்திரமாக பற்றிக்கொண்டது. இதுவிடயத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் முன்யோசனையுடன் நடந்திருக்கலாம்.ஏற்கனவே ஒரு சுயாதீன குழு -அதுவும் திருச்சபையின்ஆயர், ஒரு குரு முதல்வர். அங்லிக்கன் மதகுரு,யாழ் சின்மயா மிசனின்முதல்வர், திருமலை தென்கைலை ஆதீன முதல்வர்;,நான்கு கருத்துருவாக்கிகள,; ஒரு மருத்துவர், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் என்று எல்லா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உருவாக்கிய ஒரு சுயாதீன குழு -ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது சந்திப்புக்களை மேற்கொண்டிருந்த ஒரு பின்னணியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஏன் இடையில் உள்நுழைந்தார்கள்?

இது தொடர்பான வேலைகளை தாங்கள் சுயாதீனக் குழு செயற்பட முன்னரே தொடங்கி விட்டதாகவும் அதன் ஒரு பகுதியாக விக்னேஸ்வரனுடன் ஒரு சந்திப்பு நடந்ததாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள். எனினும் மாணவர்களின் முன்னெடுப்புகள் விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்புக்கே சாதகமாக முடிந்தன. இதன் மூலம் செயற்கையான ஒர் ஐக்கியத்தை பரபரப்பாக கட்டியெழுப்பி 13 அம்சங்கள் அடங்கிய ஓர் ஆவணத்தையும் உருவாக்கி அதை பெரிய சாதனையாக காட்டிக் கொண்டிருக்க கூட்டமைப்போ வெகு சாதாரணமாக அக்கூட்டினை சிதைத்து விட்டது.

அப்பதின்மூன்று அம்சங்கள் அடங்கிய பொது ஆவணம் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பெரிய கவனிப்பை பெற்றது.முக்கிய மேற்கத்தையஊடகங்கள் அதிகரித்த முக்கியத்துவத்தை வழங்கின. ஆனால் தேர்தலுக்கு முன்னரே அது புஸ்வானம் ஆகிவிட்டது. இதற்கு பல்கலைக்கழக மாணவர்களும் பொறுப்பேற்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களை பேய்க்காட்டியது போல சுயாதீன குழுவை நடத்தியிருக்க முடியாது. ஏனெனில் அக்குழுவில் மதத் தலைவர்களும் தொடர்ச்சியாக எழுதி வரும் கருத்துருவாக்கிகளும்காணப்பட்டார்கள். எனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேசக் கிடைத்த ஒரு வாய்ப்பு சிதைக்கப்பட்டு விட்டது.

சுயாதீன குழுவும் பிந்தி விட்டது.அக்குழுவில் காணப்பட்ட பலரும் தமிழ் மக்கள் பேரவையை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டு வருபவர்கள். கடைசியாக நடந்த எழுக தமிழ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே அது தொடர்பிலும் பேரவையின்இதுவரை கால செயற்பாடுகள் தொடர்பிலும் முழு அளவு ஆராய்ந்து பேரவையை புனரமைக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வந்த ஒரு பின்னணியில் பேரவைசுயாதீனக் குழுவை தொடக்கிவைத்தது.

எழுக தமிழ் முடிந்த கையோடு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் பேரவையை புனரமைப்பதை விடவும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி தமிழ் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு பொதுக்கருத்தை கட்டியெழுப்புவது உடனடியாகச் செய்யப்பட வேண்டிய ஒரு காரியமாக தோன்றியது. எனவே சுயாதீன குழு தொடக்கி வைக்கப்பட்டது. ஆனால் அது மிகவும் பிந்தி விட்டது. ராஜபக்ச குடும்பம் தேர்தலில் போட்டியிடுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னரே உழைக்கத் தொடங்கிவிட்டது. ஒரு ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்று திட்டமிட்டு சஜித் பிரேமதாச பல ஆண்டுகளுக்கு முன்னரே உழைக்கத் தொடங்கிவிட்டார.; மற்றொரு வேட்பாளரான அனுரகுமாரவும் அவரது கட்சியான ஜே.வி.பி.யும் அதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே உழைக்கத் தொடங்கிவிட்டன.
ஆனால் ஒரு பொது தமிழ் வேட்பாளரை தேடவேண்டிய தமிழ் சமூகமும் தனக்குள் ஒற்றுமை படாமல் சோம்பிக்கிடந்தது. சிலகருத்துருவாக்கிகள் கட்டுரைகளை எழுதினார்கள். அதற்கும் அப்பால் எதுவும் நடக்கவில்லை.தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்டகால நோக்கில் பண்படுத்தி எடுப்பதற்கு தமிழ் மக்கள் மத்தியில் எந்தவோர் ஏற்பாடும் இல்லை. கட்சிகளும் இல்லை. மக்கள் இயக்கங்களும் இல்லை.

இருக்கின்ற ஒரு பேரவைதான் எழுக தமிழ் முடித்த கையோடு சுயாதீனக் குழுவை தொடங்கி வைத்தது.அது பிந்தி விட்டது. ஒரு கிழமைக்குள் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை எப்படி கண்டுபிடிப்பது? யானையின் தும்பிக்கையில் மாலையைக் கொடுத்தனுப்பி ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு இது என்ன அரசர் காலமா? அல்லது யாககுண்டத்தை பிளந்துகொண்டு ஒரு பொது வேட்பாளர் தோன்றுவார் என்று நம்புவதற்கு இது என்ன அம்புலிமாமாக் கதையா?

எனவே ஒரு பொது வேட்பாளரை உடனடிக்குக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் சுயாதீனக் குழு அடுத்தகட்டமாக எல்லா கட்சிகளையும் ஒரு மேசைக்குஅழைத்து ஒரு பொதுப் பேர ஆவணத்தை உருவாக்குவதற்கு திட்டமிட்டது. ஆனால் அதற்கிடையில் பல்கலைக்கழக மாணவர்கள்உள்நுழைந்தார்கள். அதன் விளைவாக ஐந்து கட்சிகளின் கூட்டும் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஒரு ஆவணமும் உருவாக்கப்பட்டன. ஆனால் தேர்தலுக்கு முன்னரே அது டம்மிக் கூட்டு ஆகிவிட்டது.

இப்பொழுது கூட்டமைப்பின் நிகழ்ச்சிநிரல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. அதை ஊக்குவிக்கும் தரப்புக்கள் பணத்தை அள்ளியிறைத்திருக்கும். நேற்றுமறுபடியும் ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஆணையை வெற்றுக் காசோலையாக வழங்கி விட்டார்களா?

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.