ஜோர்ஜியாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜோர்ஜியாவில் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றாத ஆளுங்கட்சியான ஜோர்ஜியன் ட்ரீம் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதனையடுத்து தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனினும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ; பலர் எதிர்த்து வாக்களித்ததால் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
இதனையடுத்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு பதவி விலகி, முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலைநகர் திபிலிசியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றனர். அவர்களுடன் பல்வேறு அரசு சாரா அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
பாராளுமன்றத்தை நோக்கி சென்ற போராட்டக்காரர்கள், பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பாராளுமன்றத்திற்கு வெளியே, சுமார் 20 அரசியல் கட்சிகள் மற்றும் அரசுசாரா அமைப்புகள் பங்கேற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பாராளுமன்றத்திற்கு வரும் அனைத்து வீதிகளைகளையும் மறித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
அரசு அலுவலகங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் எச்சரித்தும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை என்பதனாபவ் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. #ஜோர்ஜியாவில் #எதிர்க்கட்சியினர் #போராட்டம்