இலங்கை பிரதான செய்திகள்

சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம்

துருவமயப்பட்டுள்ள   சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள். இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன். என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ,  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
இலங்கை நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்டமை குறித்து எமது பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்ச்சியடைகின்றேன்.
மும்மக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்க வேண்டும்.தாங்கள் சத்தியப் பிரமாணம் செய்ததும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை கேட்ட பின்பே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
தங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்பதற்கு அப்பால் தாங்கள் இந்த முழு நாட்டுக்குமான  ஜனாதிபதியாவீர்கள் என்ற தங்களது கூற்றை மிகவும் பாராட்டுகின்றேன்.
கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காமை பற்றிய தங்களது ஏமாற்றத்தை தாங்கள் நேரடியாகவே வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது.
தமிழர்கள் ஆகிய நாம் இனவாதிகள் அல்ல என்பதை தங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
உண்மையாகவே ஒன்றிரண்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதும் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஒரு சிங்கள பௌத்த தலைவருக்கே நாம் எப்பொழுதும் வாக்களித்திருக்கின்றோம்.
ஒரு பொறுப்பு வாய்ந்த இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் முன்னைய எல்லா தேர்தல்களையும் பார்க்க இந்த தேர்தலில் தமிழர்களும், சிங்களவர்களும் துருவமயப்பட்டுள்ளமை பற்றி கவலையடைகிறேன்.
எனது விசுவாசமான அபிப்பிராயத்தில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள் எனக்கருதுகின்றேன்.
இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன்.
மிக அவசியமான பல்வேறு விடயங்கள் உள்ள போதும் சுமார் எழுபதாயிரம் வரையிலான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்தவக் குடும்பங்கள் சுய ஆதரவில் வாழ்வதற்கான புனர்வாழ்வுத்திட்டமொன்றை  உடன் வகுத்து அமுல் செய்யும்படி தங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
தாங்கள் கூறியபடியும் தேர்தலகள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டிக் கொண்டபடியும் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடாத்த நடவடிக்கை எடுப்பீர்கள் எனவும் நம்புகின்றேன். என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  #சீ.வீ.கே.சிவஞானம்  #ஜனாதிபதி #கடிதம்  #கோத்தாபய

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.