புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை, 11 இளைஞர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட நாட்டின் முக்கிய குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான காவற்துறை பரிசோதகர் நிசாந்த டி சில்வா, தனது குடும்பத்துடன் சுவிட்ஸர்லாந்துக்குப் பயணமாகியுள்ளார். காவற்துறை திணைக்களத்தின் அனுமதி பெறாது, தனது பாதுகாப்பு நலன் கருதி அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் விசாரணை அலகின் பொறுப்பதிகாரியான, நிசாந்த சில்வா, முக்கியமான பல வழக்குகளின் விசாரணை செயற்பட்டு வந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த சில்வா முன்னெடுத்து வந்தார்.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என 13 கடற்படை அதிகாரிகளைக் கைது செய்து நீதிமன்றின் முற்படுத்தியமை, சுன்னாகம் காவற்துறைத் தடுப்பில் சுமணன் என்ற சந்தேகநபர் சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் 6 காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்திருந்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை குறித்தும் இவரே புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுத்திருந்தார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர் படுகொலைகள், மற்றும் கீத் நொயார், உபாலி தென்னக்கோன், நாமல் பெரேரா உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான அவன்ட் கார்ட் வழக்கு, ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ள வசீம் தாஜூதீன் கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளின் விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஸ்ட்ட காவற்துறை அத்தியட்சகர் சானி அபயசேகரவின் கீழ் பிரதான காவற்துறை பரிசோதகர் நிசாந்த சில்வா முன்னெடுத்திருந்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஸ்ட்ட காவற்துறை அத்தியட்சகர் சானி அபயசேகரவின் கடந்த வாரம் இடமாற்றப்பட்ட நிலையில் நிசாந்த சில்வா குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.