முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரொபட் பயாஸ் தற்காலிக விடுதலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது மகன் தமிழ்கோவின் திருமணத்திற்காக ஒரு மாதம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் கொலை குற்றவாளியாக இனம் காணப்பட்டுள்ள ரொபட் பயாஸ் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகனின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஒரு மாதம் பிணை வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த விடுவிப்பு மனுவை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் ரொபட் பயாசுக்கு ஒருமாத கால பிணை வழங்குவதாக உத்தரவிட்டுள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது, அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நவம்பர் 25 முதல் ஆமுலுக்கு வரும் இந்த பிணை அனுமதி எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து நேற்று (25.11.19) ரொபர்ட் பயாஸ், புழல் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் பலத்த காவற்துறைப் பாதுகாப்புடன் தனி வாகனம் மூலம் தனது வீடு நோக்கி சென்றதாக தமிழ ஊடகங்கள் தெரிவிக்கின்றன.