நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் கலைக்கப்படுமாயின் 2020 ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் பொதுத் தேர்தலை நடத்த கூடிய இயலுமை உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சபாநாயகருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தலை மிகவும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்த ஊடகம் சார்ந்த சட்டங்களை தயாரிக்க நாடாளுமன்றம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதன்போது சபாநாயகரிடம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். அது தொடர்பான யோசனைகளை எதிர்வரும் தினங்களில் நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சபாநாயகரிடம் எடுத்து கூறியுள்ளார்.
அதேபோல், கைவிடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அவசியமான விதிமுறைகளை பாராளுமன்றத்தில் கூடிய விரைவில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்வது அவசியம் எனவும் மஹிந்த தேசப்பிரிய, சபாநாயகர் கருஜயசூரியவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கும் மேலதிகமாக 2018 ஆம் நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அடையாளம் கண்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களையும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்துடன் முன்வைக்க எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.