மகாராஷ்டிராவின் முதல்வராகவும், கூட்டணி தலைவராகவும் உத்தவ் தாக்கரே தெரிவு செய்யப்பட்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் ; தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் ஆட்சி அமைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்றையதினம் வழங்கிய தீர்ப்பில் இன்று மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்பதுடன் வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசியலில் திருப்புமுனையாக அஜித் பவார் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்று மூன்று நாட்களே ஆன தேவேந்திர பட்னவிசு பதவிவிலகினார். அதனைத் தொடர்ந்து பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக ஆளுனரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாலை, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே மூன்று கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்த தீர்மானத்தை முன்மொழிய அதனi தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிதின் ரௌத் ஆகியோர் வழிமொழிந்தனர். இதன்பின்னர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும்; இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் மூன்று கட்சிகளின் கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் எனவும் முடிவுசெய்யப்பட்டது.
மேலும் உத்தவ் தாக்கரேவை முதல்வராக முன்மொழிந்த ஜெயந்த் பாட்டீல் தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்சியின் பாலாசாகேப் தோரத் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, கூட்டணியின் தலைவராகவும், மாநிலத்தின் முதல்வராகவும் உத்தவ் தாக்கரேவை முன்மொழிந்த தீர்மானத்தை, அனைத்து சட்டமதன்ற உறுப்பினர்களும் ; ஒருமனதாக நிறைவேற்றினர்.
இதையடுத்து இரவு 10 மணிக்கு, ஆளுநரைச் சந்தித்த உத்தவ் தாக்கரே ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் நாளை மாலை 6.40 மணிக்கு உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்கவுள்ளார்.
அவருடன் காங்கிரஸைச் சேர்ந்த பாலாசாகேப் தோரத், என்சிபியைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. #மகாராஷ்டிரா #உத்தவ்தாக்கரே #சிவசேனா #அஜித்பவார்