இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரகத்தின் உத்தியோகத்தரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் காவற்துறை மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கம் ஆகியன விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரகத்தின் உத்தியோகத்தரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுவிட்ஸலாந்து அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுவிட்ஸலாந்து வெளிவவகார அமைச்சு, சம்பவம் தொடர்பில் துரித கதியில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரகத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டது, அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டதாக ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தூதரகத்தின் தகவல்களை வெளியிடுமாறு அடையாளம் தெரியாத சிலர் தமது பணியாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக சுவிட்ஸலாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவையும் தெளிவுப்படுத்தியுள்ளதாக சுவிட்ஸலாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று (27.11.19) இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதுவர் ஹான்ஸ் பீட்டர் மோக் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது குறித்த சம்பவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.