கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஏற்பாட்டில், வன்முறையற்ற வாழ்வுக்கான கலைஞர்களும் நுண்கலைத்துறை மாணவர்களும் இணைந்து பங்குபற்றும் காண்பியக்கலையாக்கங்களின் காட்சி ‘வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்’ எனுந்தலைப்பில் வந்தாறுமூலையிலுள்ள நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில் இன்று (04.12.2019) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இக்காட்சி நாளை வரை இடம்பெறவுள்ளது.
நுண்கலைத்துறையின் தலைவர் சு.சந்திரகுமார் தலைமையில் தொடங்கிய ஆரம்ப வைபவத்திற்கு பிரதம அதிதியாக கலை கலாசார பீடத்தின் புதிய பீடாதிபதியாக கடமையினைப் பொறுப்பேற்றுள்ள கலாநிதி ஜே.கெனடி வருகைதந்து கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
இக்காட்சியில் ஓவியர்களான கமலாவாசுகி, சு.நிர்மலவாசன், மு.தா.பா.ருக்சானா, கோ.மதீஸ்குமார், செ.திவாகர்,வெ.ஜதிஸ்குமார்,க.மு.பா.பர்ஹானா ஆகியோரின் கலையாக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியை ஆரம்பித்துவைத்த கலைகலாசார பீடாதிபதி தான் பீடாதிபதியாக கடமையினை ஏற்று முதலாவதாக பங்குபற்றும் கலையாக்க நிகழ்ச்சியாக இது அமைகின்றது. நமது பீடத்தின் நுண்கலைத்துறையானது சமூகத்தோடு இணைந்து சமூகப்பங்குபற்றலுடன் கலையாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் ஒரு துறையாக உள்ளமை விசேடமாக குறிப்பிடவேண்டிய விடயமாகும். இன்று நடைபெறும் கண்காட்சி மிகவும் முக்கியத்துவமானது. முக்கியமான ஓவியக்கலைஞர்கள் நுண்கலைத்துறையினருடன் இணைந்து செயலாற்றுவது நுண்கலைத்துறையின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. இக்கண்காட்சியில் நமது நுண்கலைத்துறையின் பர்ஹானா எனும் மாணவியின் கலையாக்கங்களும் இடம்பெறுகின்றமை விசேடமாகப் பாராட்டப்படவேண்டியது. நுண்கலைத்துறையின் மாணவர்கள் இதனூடாக பல்வேறு அனுபவங்களைப் பெற வாய்ப்புக் கிடைத்துள்ளது. இக்கண்காட்சியை வேறு இடங்களிலும் நடத்த வேண்டியது காலத்தின் தேவையாகும.; இதற்கு என்னாலான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க நான் தயாராகவுள்ளேன் எனக்கருத்துரைத்திருந்தார்.
இக்கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் அதிதிகளாக விரிவுரையாளர்களான காலநிதி.சி.ஜெயசங்கர்,திரு. கு.ரவிச்சந்திரன் ஆகியோரும் நுண்கலைத்துறையின் ஏனைய விரிவுரையாளர்களும் பங்குபற்றினர். பல்கலைக்கழக ஆசிரியர்களும்,மாணவர்களும் கலையார்வலர்களும் வருகை தந்து இக்காட்சிகளைப் பார்வையிட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.