கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தற்காலிகமாக வாபஸ்- ஏன்?
இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி என்ற அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ச தனக்குள்ள விடுபாட்டுரிமையை வலியுறுத்துவதை தடுப்பதற்காகவே இந்த தந்திரோபாய நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
கோத்தாபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவரிற்கு எதிராக மீள வழக்கு தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களிற்கு உள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின்சூக்கா- அவர் தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவரும் அவரிற்கு உதவியவர்களும் பொறுப்புக்கூடும் நிலையேற்படும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இந்த தாமதம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக நீண்டநாள் காத்திருக்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தாபயவின் பதவிக்காலம் முடிவடையும் ஒரு நாளில் நீதி சாத்தியமாகலாம் என்பது குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கு தாக்கல் செய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களிற்கு எதிராக பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றால் இந்த குற்றங்களிற்கு யார் காரணம் என்பது தெளிவாகிவிடும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்தவண்ணமுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் ஹவுஸ்பீல்ட் எல்எல்பி என்ற அமைப்புடன் இணைந்து வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
ஏப்பிரல் 2019 இல் கலிபோர்னியா நீதிமன்றில் ரோய் சமாதானம் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதன் பின்னர் யூன் மாதத்தில் இரண்டு சிங்களவர்கள் உட்பட பத்துபேர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அமெரிக்க நீதிமன்றில் நீதிவழங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவ்வேளை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கோத்தாபய ராஜபக்சவிடம்இது குறித்து ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
ஈவிரக்கமற்ற சித்திரவதைகளிற்கு கோத்தாபய ராஜபக்சவே காரணம் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை எங்கள் கட்சிக்காரர்கள் சமர்ப்பித்தனர் என அவர் சர்வதேச சட்டங்களின் கீழ் ஒரு நாள் இதற்கு பதிலளிப்பார் என மனித உரிமை சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தற்போது ஜனாதிபதியாகயிருப்பதன் காரணமாக எதிர்காலத்தில் அவரை பொறுப்புகூறுமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோருவதை தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.