குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தமிழக நபடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (டிசம்பர் 9) அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பங்களாதேஸ்;, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தல்களை அனுபவித்த இஸ்லாமியர் அல்லாத அகதிகள், மக்கள் குடியுரிமை திருத்த மசோதாவின் கீழ் குடியுரிமை பெறுவார்கள் என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி, இதைத் திரும்பப் பெற வேண்டுமென வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மசோதாவை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ‘இந்த சட்டம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. இது மதரீதியான பாரபட்சம் ஆகும்’ என்று குறிப்பிட்டுள்ள ஜவாஹிருல்லா, ‘மியான்மர் மற்றும் இலங்கையைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் நாடுகளை மட்டும் இந்த மசோதா கவனத்தில் எடுத்திருப்பது மற்றொரு பாரபட்சமாகும்.
இலங்கையில் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் பெற்று வாழ்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழகக் கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பதை நிராகரித்து இருப்பதைத் தமிழக அரசியல் கட்சிகள் கவனத்தில்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். #ஈழத்தமிழர்களுக்கு #குடியுரிமைமசோதா #ஜவாஹிருல்லா