குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நீடிக்கின்ற நிலையில் இப்போராட்டங்களால் 106 புகையிரதசேவைகளை வடகிழக்கு புகையிரத திணைக்களம் ரத்து செய்துள்ளதுடன் 9 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் குடியிரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்ததையடுத்து இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இச்சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பெரும் மோதலாக வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்களின் போது பாதுகாப்பு படையினருடனான மோதலில் அஸ்ஸாமில் 3 பேர் பலியாகியுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளதுடன் இம்மாநிலங்களில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் முமல்படுத்தப்பட்டுள்ளன.
குவஹாத்தில் இன்றும் தடைகளை மீறி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. குவஹாத்தியில் போராட்டக்காரர்களின் செய்திகளை ஒளிபரப்பிய உள்ளூர் தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேகாலயாவிலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் அஸ்ஸாமில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது #குடியுரிமைதிருத்தசட்டம் #போராட்டங்கள் #கைது #வடகிழக்கு