கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதை அடுத்து அவரை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி இன்றைய தினமும் (16.12.19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற குறித்த பெண் அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.
தான் கடத்தப்பட்டதாக தெரிவித்து செய்த முறைப்பாட்டுக்கமையவே அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதுடன், இறுதியாக அவர் கடந்த சனிக்கிழமை வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.
இதேவேளை, குறித்த பெண் அதிகாரிக்கு இன்றுவரை வெளிநாடு செல்ல கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி தடைவிதித்துள்ளார். அதற்கமைய அவர் தொடர்பான வழக்கு விசாரணை நாளைய தினம் இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னரும் கடந்த 12 ஆம் திகதி இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
இதன்போது குறித்த சுவிஸ் அதிகாரியை விசேட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி பரிசோதித்து அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
எவ்வாறாயினும் குறித்த அதிகாரியிடம் இதுவரை முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு முடிவடையவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்கம் தெரிவித்துள்ளது.