மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவோரின் செயற்பாடுகள்; உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டமையினால் வட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற துஷ்பிரயோக நடவடிக்கை தொடர்பாக காணி அபிவிருத்தி , சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு அவசர கடிதம் எழுதியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வட பகுதியில் அனுமதி அளிக்கப்படாத இடங்களில் மணல் அகழப்படுவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், மணல் அகழ்வு தொடர்பில் தென் பகுதிக்கும் வட பகுதிக்கும் இடையில் வித்தியாசங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் வடக்கு மாகாணத்தில் பரவலாக மணல் திட்டுக்கள் காணப்படுவதால் வீதி அனுமதி இரத்தானது பல்வேறு தரப்பினரையும் அனுமதி அளிக்கப்படாத இடங்களில் எல்லாம் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்தோடு சட்ட ரீதியாக அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் அகழ்வில் ஈடுபடுவதினால் சுற்றாடல் பாதுகாப்பிற்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின்போது துஷ்பிரயோகங்கள் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாது இருந்த தரப்புக்கள் தற்போதைய அரசாங்கம் மக்கள் நலன்சார்ந்து மேற்கொண்ட தீர்மானங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்து வருவதற்கு அமைச்சர் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். #வடக்கில் #சட்டவிரோத #மணல்அகழ்வு #டக்ளஸ்தேவானந்தா