ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வெளியுறவுகளுக்கான மேலதிகச் செயலாளர் பதவிக்கு சர்வதேச உறவுகளில் நிபுணரான அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவை நியமித்துள்ளார். அட்மிரல் கொலம்பகே இலங்கை கடற்படையில் 36 வருடங்கள் சேவையாற்றி, 2014ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி கடற்படை தளபதியாக ஓய்வு பெற்றார். அட்மிரல் கொலம்பகே இலங்கை கடற்படையின் 18வது தளபதியாவார். கடற்படையில் அவர் ஆற்றிய சேவைகளுக்காக பல்வேறு விருதுகளையும் பராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
கடற்படையிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து பாத்பைண்டர் நிறுவனத்தில் இந்திய -இலங்கை முன்னெடுப்புகள் மற்றும் கடல் மைய சட்டத்துறைக்கான பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். இந்நிறுவனம் கொழும்பை மையமாகக்கொண்ட ஒரு முன்னணி சிந்தனை மற்றும் ஆய்வு நிலையமாகும். அட்மிரல் கொலம்பகே பாத்பைண்டர் நிறுவனத்தையும் இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு ஆய்வுகளை முன்வைத்துள்ளார். மேலும் சர்வதேச அரசியல், மூலோபாயம் மற்றும் கடற் பாதுகாப்பு துறைகள் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களில் பங்குபற்றியுள்ளதுடன், பல கூட்டத்தொடர்களுக்கு தலைமை வகித்துள்ளார்.
அட்மிரல் கொலம்பகே இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் விசேட விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். பேராசிரியர் கொலம்பகே சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற பல்வேறு கல்வி சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
அட்மிரல் பேராசிரியர் கொலம்பகே சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளதுடன், சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகளில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச கற்கைகள் துறையில் முது கலைமானி பட்டத்தையும் பெற்றுள்ளார். அவரது கலாநிதி பட்டத்திற்கான ஆய்வு ஜேர்மனியிலுள்ள லம்பேட் கல்வி வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அட்மிரல் லண்டன் கடல்சார் நிறுவனத்தின் ஒரு உறுப்பினருமாவார். #ஜயநாத்கொலம்பகே #வெளியுறவுகளுக்கான #செயலாளராக