குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் மெட்ரோ புகையிரத நிலையங்கள் மூடப்பட்டு, செல்போன் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் அரசியல் கட்சிகள் ஆகியவை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. மும்பை, சென்னை, புனே, ஹைதராபாத், நாக்பூர், புவனேஸ்வர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் இன்று நடைபெறவிருந்தாலும் பெரும்பாலான இடங்களில் காவல்துறையினர்; அனுமதி மறுத்துள்ளனர்.
பாதுகாப்பு எச்சரிக்கைக்காக 144 தடை விதித்துள்ள காவல்துறையினர் 4 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். எனினும் தடையை மீறி பேரணி செல்ல போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை போராட்டங்களின் எதிரொலியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதிவரை போராட்டம் மற்றும் பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தடையையும் மீறி பல இடங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது #டெல்லி #தடை #குடியுரிமைதிருத்தச்சட்டம் #போராட்டங்கள்