[ யாழ்.தர்மினி பத்மநாதன் ]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் , எஸ் .விக்கினரூபன் தலைமையில் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான ஒன்றுகூடல் இன்று [ 21/12/2019 ]சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு விஞ்ஞான பீட பௌதீகவியல் விரிவுரை மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் ஒன்று கூடலில் 8 பேர் கொண்ட யாழ்.பல்கலைக்கழக பழைய மாணவ சங்கத்தின் இடைக்கால நிருவாகக் குழு தெரிவு இடம்பெற்றது.
இடைக்கால நிருவாகக் குழுவின் தலைவராக ,எஸ் .தபோதரன் , உப தலைவராக கே .றஜீபன் , செயலாளராக எஸ் .ரவி. உப செயலாளராக ப.கங்காதரன் , பொருளாளராக தி .இந்திரகுமார் உட்பட உறுப்பினர்களாக யாழ்.தர்மினி பத்மநாதன் , ஏ .அன்ரன் சாள்ஸ் ஏ . மற்றும் ரஞ்சித் குமார் .ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். .
எதிர்வரும் ஆறு மாத காலங்களுக்கு இயங்கும் இவ் இடைக்கால குழுவினர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயற்படாதிருந்த சங்கத்தின் நிருவாக சட்டக் கோவையினை சில மாற்றங்களுக்கு உட்படுத்துவதுடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நண்பர்களையும் சமுதாய நலன் கருதி சங்கத்தில் இணைக்கும் பணியினை ஆரம்பித்து உள்ளனர். அத்துடன் மூன்று மாத காலத்தில் இரண்டாம் நிலைச் சந்திப்பும் இடம்பெற உள்ளது. எனவே சமூக அக்கறை கொண்டும் ,உதவி கோரும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் , வேலையற்ற பட்டதாரிகள் போன்றோருக்கு உதவும் வகையில் ஏனைய நிறுவனங்கள், அரச , அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளாக , பணியாளர்களாக பணிபுரியும் அனைவரையும் பங்கு கொண்டு பழைய மாணவர் சங்கத்தினை செயல் முனைப்புடன் இயங்க ஒத்துழைக்கும் படி அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள செய்திக்கு குறிப்பில் குறிப்பிடுகையில் படித்து பட்டம் பெற்று வெளியேறிய பலரும் பல்கலைக்கழகத்தில் அளவற்ற பற்றுக்கொண்டவர்களாக இருக்கின்ற போதும் அவர்களால் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஏதுநிலை கடந்த இருபது ஆண்டுகளாக பழையமாணவர் சங்கம் தொழிற்படாமல் இருந்த நிலையில் சாத்தியமாகவில்லை.பல்கலைக்கழகத்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறிய பலரும் சமூகத்தில் உயர்பதவியில் உள்ளர்கள். அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்புக்கள் பல்கலைக்கழகத்திற்கும் எமது பட்டதாரிகளின் எதிர்காலத்திற்கும் தேவை என்பதனை மாணவர் ஒன்றியம் ஆகிய நாம் உணர்ந்து கொண்டோம்.அதன் காரணமாகவே இத்தகைய ஒரு ஒன்று கூடலினை நாம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஊடாக ஒருங்கமைத்துள்ளோம். வடக்கு மக்களின் கல்வியில் நேரடியாகவும் மறை முகமாகவும் பாரிய பங்காற்றுவது எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும்.எமது பல்கலையில் கல்வி கற்ற பலர் உயர் நிலையில் இருக்கின்ற சமநேரத்தில் பலர் உரிய வேலைகளை பெற்றுக்கொள்வதில் கூட பலத்த போராட்டத்தை சந்திக்கின்றார்கள்.இந்த பிரச்சனையை அவ் உயர் பதவிகளில் இருப்பவர்களால் ஓரளவு தீர்க்க முடியும் என நாம் நம்புகின்றோம்.
இது போன்று எமது பல்கலையில் மேலும் பல விடயங்கள் பல்கலையை தாண்டி வெளியில் இருந்து கொண்டு எமது பல்கலையின் மீது அளவற்றபற்றுள்ளவர்களால் செய்யப்பட வேண்டியுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளினை செய்வதற்கும் அவ்வாறானவர்களை இணைத்துக்கொள்வதற்கும் பல்கலைக்கழக பழையமாணவர் சங்கமே சிறந்த ஓர் பொறிமுறையாக நாம் எண்ணுகின்றோம்.
எனவே இவ் பழைய மாணவர் சங்க கூட்டத்தில் எமது சமூகத்தின் மீதும் பல்கலையின் மீதும் பற்றுள்ளவர்களாக எமது யாழ் பல்கலைக்கழக அன்னையிடம் கற்று பட்டம் பெற்று வெளியேறிய அனைவரையும் இதனூடாக சேவையாற்ற உரிமையோடு அழைக்கின்றோம். எனவே எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறிய அனைவரும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பழையமாணவர் சங்க ஒன்று கூடலில் பங்கு கொள்ளுமாறும் அதனூடாக தொடர்ந்தும் எமது பல்கலைக்கழக வளர்ச்சிக்கு என்றும் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் நிற்க கிடைக்கப் பெற்றுள்ள சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்துமாறும் அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றோம். எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு செயலாளரின் 0775449833 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும் . #யாழ்பல்கலைக்கழக #பழையமாணவர்சங்கம் #நிருவாகக் குழு