“நான் போராளிகள் அனைவரையும் மதிக்கின்றவன் . ஜெயந்தன் படையணி என்றால் உங்களுக்கு தெரியும் எதிரிகளுக்கு நடுக்கம் பிடிக்கும் என என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(20.12.19) மாலை மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது கருத்து தெரிவித்துள்ள அவர்,
“நான் போராளிகள் அனைவரையும் மதிக்கின்றவன் . ஏனெனில் எனக்கு தோள் கொடுத்தவர்கள் அவர்கள்தான் .ஜெயந்தன் படையணி என்றால் உங்களுக்கு தெரியும் எதிரிகளுக்கு நடுக்கம் பிடிக்கும். எங்களது படையணிகளின் மகுட வாக்கு எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் வெற்றிபெறுவோம். இப்படித்தான் போராட்ட காலத்தில் படை வைத்திருந்தேன் இந்த படையில் இருப்பவர்கள் மட்டும் அம்பாறைப் போராளிகள் அது நமக்கு பெருமையான விடயம் பெரும் தியாகத்தை செய்துள்ளோம்.”
“ஜெயசிக்குறு தொடக்கம் ஆனையிறவு சமர் வரை பல வெற்றிகளை கண்ட படை எமது ஜெயந்தன் படை. யுத்தம் செய்ய முடியாமல் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அதன்பிறகுதான் ஓஸ்லோ பேச்சுவார்த்தைக்குப் போனோம்.இந்தப் பேச்சு வார்த்தையை ஒரு தளமாக பயன்படுத்தி இந்த தேசத்தில் அமைதியைக் கொண்டு வந்து மேலதிக படுகொலையை நிறுத்தி இதில் ஏதோ ஒரு வெற்றி அடையவேண்டும் என்பதே இந்தக் காருணா அம்மானின் நோக்கம். நான் அண்டன் பாலசிங்கம் அண்ணா விடம் சொன்னேன்.
ஒஸ்லோவில் இடம்பெற்ற முதலாவது கட்ட பேச்சுவார்த்தையின்போது மத்தியஸ்தம் வகித்த நோர்வே அரசு எழுத்துமூல பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. சமஸ்டி முறையான தீர்வுக்கு இரு தரப்பும் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கூறினர். முதலில் மறுத்த பிரதான பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் அவர்களிடம் நானே எடுத்துரைத்து ஒப்பமிட வைத்தேன்.ஏனெனில் அந்த சமரின் பின்பு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் காயமடைந்தும் மருத்துவ உபகரணங்கள் உடை இன்றி உணவு இன்றி இருந்தனர். இவற்றையெல்லாம் சீர் செய்ய ஒரு கால அவகாசம் தேவை இதை முன்னிறுத்தியே பேச்சுவார்த்தை செய்வோம் ஒப்பந்தம் வையுங்களேன் என வலியுறுத்தினேன்” என குறிப்பிட்டார். இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி அம்பாறை மாவட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.
பாறுக் ஷிஹான்