நாட்டின் 7 மாகாணங்களில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 64,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் இதுவரை 3 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், 6 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
சீரற்ற வானிலையால் 18,840 குடும்பங்களை சேர்ந்த 64,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் 5,255 குடும்பங்களை சேர்ந்த 17,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 126 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய 16,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரம், கலாவௌ குளம் பெருக்கெடுத்துள்ளமையால் அதன் வான் கதவுகள் 20 அடிவரை திறக்கப்பட்டுள்ளன.
கவுடுள்ள நீர்தேக்கத்தின் 12 வான் கதவுகள் 6 அடி வரை திறக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து நிமிடம் ஒன்றுக்கு 150 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் 6 மாவட்டங்களில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை இன்று மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த மாவட்டங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் எனவும் அந்த திணைக்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.