பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் ராணுவத் தளபதியுமான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு கடந்த வாரம் தேச துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அந்த நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறை இடையே மோதலை உருவாக்கியுள்ளது.
அரசின் நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு அதிகம் இருப்பதாக ராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த அந்த நாட்டில் நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
2007ல் அரசமைப்பை மீறி அவசர நிலையை பிரகடனப்படுத்தி தேச துரோகம் செய்ததாக அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் அரசியலமைப்பின் பிரிவு 6ன்படி நாட்டின் அரசியலமைப்பு அமலாவதை தடுக்கும் வகையில் செயல்படவோ, தற்காலிகமாக நீக்கவோ அல்லது நிறுத்திவைக்கவோ முற்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கலாம். இந்த சட்டத்தின்படிதான் முஷாரஃப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 டிசம்பர் அன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு அந்த நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
முஷாரஃபை போல பல ராணுவத் தளபதிகள் நாட்டின் ஆட்சி கவிழ்ந்தபிறகு பொறுப்பேற்று, மக்களாட்சி இருந்தபோது முக்கிய முடிவுகளில் தங்களது அதிகாரத்தைக் காட்டியும் உள்ளனர்.
ஆனால் ராணுவத்தில் பணிபுரிந்த ஒருவர் இவ்வாறு தேசதுரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதும் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதும் இதுவே முதல்முறை.
தீர்ப்பின்விளைவுகள்
முஷாரஃப் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்களும் அவரை விமர்சிப்பவர்களும் சமூக வலைதளத்தில் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
பலூசிஸ்தானின் அரசியல் தலைவர் அக்தர் மேங்கல், எங்களை துரோகிகள் என்று கூறியவரை இன்று நீதிமன்றம் துரோகி என தீர்ப்பளித்துள்ளது. இந்த முக்கிய தீர்ப்பு அவரது கொடுமையினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை தந்துள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“முஷாரஃப் ஒருவர்தான் அரசமைப்புடன் விளையாடியவரா? அவர் முடிவெடுக்கும்போது அதை கவனித்துக்கொண்டிருந்த மற்ற நீதிபதி எங்கே? அவர்களின் பெயரைக் கூறமுடியுமா,” என பதிவிட்டுள்ளார் பத்திரிக்கையாளர் ஃபெரீஹா.
இந்த தீர்ப்புக்கு பின்னர் இதற்கான தங்கள் தரப்பு எதிர்வினையை முடிவு செய்ய ராவல்பிண்டி ராணுவ தலைமை அலுவலகத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் கூடினர்.
இந்த சந்திப்பு நடந்து சில நேரங்களில், ஜெனரல் முஷாரஃப் குறித்து, சிறப்பு நீதிமன்றம் எடுத்த இந்த முடிவு மிகுந்த வேதனையளிக்கிறது என ஒர் அறிக்கை வெளியிட்டது பாதுகாப்பு படைகள் செய்தித்தொடர்பு அலுவலகம்.
நாட்டின் பாதுகாப்பிற்காக பல போர்களில் சண்டையிட்ட ஒரு ராணுவ அதிகாரி, ஒரு துரோகியாக இருக்க முடியாது என அதில் இருந்தது.
இந்த தீர்ப்பைக் கண்டித்த அந்த அறிக்கையில் சட்ட செயல்முறை புறக்கணிக்கப்பட்டதுடன் முஷாரஃப்புக்கு தன்னுடைய தரப்பை சொல்ல வாய்ப்பும் அளிக்கப்படவில்லை என இருந்தது. அந்த அறிக்கையின் முடிவில் பாகிஸ்தான் ராணுவம் நியாயமான தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பாக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்புகூட பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அலுவலகம் நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பல முக்கிய பிரச்சனைகளில் ராணுவத்தின் வரம்பு மீறி பலமுறை கருத்து கூறியிருக்கிறது. ஆனால் அவற்றில் எதிலும் இவ்வளவு கண்டிப்புத்தன்மை இல்லை.
ஆனால் இந்த விஷயத்தில் பாகிஸ்தான் ராணுவம் முஷாரஃப்புக்கு ஆதரவாக தங்கள் தரப்பை பகிரங்கமாகவும் தெளிவாகவும் கூறுகிறது.
தீர்ப்பின் மீதான விமர்சனம்
தீர்ப்பளிக்கப்பட்ட இரு நாட்களுக்கு பிறகு, விரிவான தீர்ப்பு வெளியிடப்பட்டது. இது மக்களின் மத்தியில் புது சர்ச்சையை கிளப்பியது.
இந்த தீர்ப்பின் 66வது பத்தியில், மூன்று சிறப்பு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தலைவர் வாகர் செத், ஒருவேளை முஷாரஃப் கைதாவதற்கு முன் இறந்தால் அவருடைய சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, நாட்டின் நாடாளுமன்றத்திற்கு முன்பிருக்கும் டி-சௌக் எனப்படும் ரவுண்டானாவுக்கு இழுத்து வரப்பட்டு, மூன்று நாட்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என எழுதியிருந்தார்.
ராணுவத் தரப்பிலிருந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, இது மனிதாபிமானத்திற்கும் மதத்திற்கும் எதிரானது என பாதுகாப்பு படைகள் செய்தித்தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் கூறினார்.
இது தொடர்பாக வாகர் செத் மீது விசாரணை நடத்தப்படும் எனவும் பர்வேஸ் முஷாரஃப்புக்கு எதிரான தீர்ப்பு சட்டவிரோதமானது எனவும் அரசு அறிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் ஃபவாத் சௌத்ரி, முஷாரஃப்பின் வழக்கு இல்லையென்றால், லபாயிக் அமர்வு போராட்டம், ராணுவத்தின் ஆள்சேர்ப்பு நீட்டிப்பு என ஏதாவது ஒரு விஷயத்தில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ அமைப்பு குறிவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது ஒரு முன்னாள் ராணுவத் தளபதி அவமதிக்கப்பட்டுள்ளார் என தன்னுடைய ட்விட்டர் பதிவு ஒன்றில் பதிவிட்டிருந்தார்.
ராணுவத்தை சீண்டினால் நாட்டில் தேவையில்லாத வன்முறைகள் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
பழிக்கு பழி
ராணுவத்தின் பதிலுக்கும் அரசின் அறிவிப்புக்கும் பாகிஸ்தான் பார் கவுன்சில் பதில் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படைகள் செய்தித்தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது முஷாரஃப்பின் தீர்ப்பு குறித்து கூறியது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றதாகும்.
“ராணுவத்தின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பைப்பற்றி கூறப்பட்ட விதம், பாகிஸ்தான் ராணுவம் பிற அமைப்புகளுக்கு எந்த மரியாதையும் அளிக்காது என்பதை காட்டுகிறது,” என பாகிஸ்தான் பார் கவுன்சில் துணைத் தலைவர் சையத் அம்ஜத் ஷா மற்றும் செயற்குழு தலைவர் ஷேர் முகமது கான் கூறியுள்ளனர்.
இப்போது ஆட்சியிலிருக்கும் அரசு, அதன் அமைச்சர்கள், சட்ட அதிகாரிகள், பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் ஆகியோரின் அணுகுமுறையிலிருந்து இந்த அரசு ராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்துவதாக பார் கவுன்சில் கூறியுள்ளது.
இது பாகிஸ்தானின் எதிர் கட்சியினர் கூறும் குற்றசாட்டு ஆகும்.
‘முன்னெப்போதுமில்லாத ஒன்று’
இந்த தீர்ப்பு முன்னெப்போதுமில்லாத ஒன்று எனவும் இதன் தாக்கம் வெகுதூரம் இருக்கும் எனவும் வழக்கறிஞர் ஹைதர் இம்தியாஸ் கூறியுள்ளார்.
“அரசமைப்பை ரத்து செய்து அல்லது இடைநீக்கம் செய்து, தங்களது அதிகாரம் மூலம் நாட்டை கட்டுப்படுத்தலாம் என்று நினைத்தால், இந்த தீர்ப்பு அவர்கள் செய்யும் குற்றங்களை தடுத்த நிறுத்தும் என்பதை நிரூபணம் செய்கிறது.”
“தனி நபர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இந்த நாட்டை ஆள முடியாது. அரசமைப்பு என்பது புனிதமானது” என்று அவர் மேலும் கூறினார்.
அரசமைப்புக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் என்று ராணுவம் உறுதிமொழி ஏற்றிருக்கிறது. ஆனால், அரசமைப்பை மீறி பலமுறை ராணுவம் நடந்து கொண்ட வரலாறு இருப்பதாக ஆய்வாளர் யாசிர் லத்தீப் ஹம்தானி நம்புகிறார்.
நீதித்துறைக்கு எதிரான பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கான தகவல் தொடர்பு இயக்குநர் கூறிய கருத்து “நியாயமற்றது என்றும் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும்” என்றும் யாசிர் கூறுகிறார்.
Image caption
ஆனால், பாதுகாப்பு படைகள் செய்தித்தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் எந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் எதிர்கொள்ள மாட்டார் என்றும் யாசிர் நினைக்கிறார். ஏனெனில் தற்போதைய அரசாங்கம் வலுவிழந்து இருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன் லாகூர் மருத்துவமனை தாக்குதலை தொடர்ந்து பார் கவுன்சில்களும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
லாகூரின் மிகப்பெரிய இதய நோய் மருத்துவமனையில், இளம் வழக்கறிஞர்கள் பலர் உள்ளே நுழைந்து, கட்டடத்தை சேதப்படுத்தி, மருத்துவர்களை தாக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்தது. இதில் மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாக அரசு தெரிவித்தது.
எனினும், தற்போதைக்கு எந்த அரசமைப்பு சிக்கலும் வராது என்கிறார் யாசிர்.
“இந்த சர்ச்சைக்கு காரணமானவர் என்று கருதப்படும், தலைமை நீதிபதி ஓய்வு பெற்று விட்டார்.”
முஷாரஃபிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த ஒரு சில நாட்களிலேயே அதாவது டிசம்பர் 20, 2019ல் பாகிஸ்தான் தலைமை நீதிபதி அசீஃப் சயீத் கோசாவில் பதவிக்காலம் முடிவடைந்தது. அவரையடுத்து புதிய தலைமை நீதிபதி குல்சர் அஹமத் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் முஷாரஃபின் தீர்ப்பில் சர்ச்சைக்குரிய பகுதியை எழுதிய நீதிபதிக்கு எதிராக எந்த குறிப்பும் அரசாங்கம் தாக்கல் செய்ய அனுமதிக்காது என்று யாசிர் கருதுகிறார். இதனால், பாகிஸ்தானில் உள்ள அரசு அமைப்புகளுக்கு இடையே எந்த பிரச்சனையும் தற்போதைக்கு வராது என்பது யாசிரின் கருத்து.
முஷாரஃப் எங்கே?
முஷாரஃப் தனது மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2016ஆம் முதல் துபாயில் இருந்து வருகிறார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், தீர்ப்பு அறிவிக்கப்படும்போது அவர் அங்கு இல்லை.
இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய முன்னாள் அதிபர் முஷாரஃபிற்கு 30 நாட்கள் அவகாசம் உண்டு. இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட வீடியோ பதிவில், இத்தீர்ப்பு தனிப்பட்ட விரோதம் காரணமாக அளிக்கப்பட்டது என்றார்.
முஷாரஃபின் கட்சியான அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெளியிட்ட அறிக்கையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
நன்றி – BBC