வௌ்ளை வான் சந்தேக நபர்களுக்கு ஜனவரி 6 வரை விளக்கமறியல்
வௌ்ளை வான் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (27.12.19) முற்பகல் முன்னிலைப் படுத்தப்பட்டனர். மூன்றாவது சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றில் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதன்போது, ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்திருந்ததது. இந்நிலையிலே குறித்த இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் வௌ்ளை வான் ஓட்டுனர்கள் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் டிசம்பர் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று (27.12.19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இருவரில் ஒருவர் வௌ்ளை வேன் ஓட்டுனராக கடமையாற்றியதாகவும் மற்றும் ஒருவர் புலிகள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து தங்கத்தினை எடுத்துவருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா துப்பாக்கி பறிப்பு சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கி அவரின் துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் நேற்று (26.12.19) முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மாதம் 09 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அவருக்கு உதவி புரிந்த மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்ட நிலையில், பறித்துச் செல்லப்பட்ட துப்பாக்கியும் தோட்டாக்கள் அடங்கிய மெகசின் ஒன்றும் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.