இலங்கை பிரதான செய்திகள்

சாதனை மாணவி

விளையாட்டுத்துறையிலும் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் பிரகாசித்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி சந்திரசேகரம் சங்கவி, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியலில் 3 ஏ சித்தியைப் பெற்று சாதித்துள்ளார்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்க ஆரம்பித்த மாணவி சந்திரசேகரம் சங்கவி, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6ஆவது இடத்தைப் பெற்றார்.

தொடர்ந்து 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தார்.

விளையாட்டு ஒருபோதும் கல்விக்கு தடையாக இருந்தில்லை தனது 16ஆவது வயதில் தெரிவித்திருந்த சங்கவி, அதனை க.பொ.த. உயர்தரப் பரீட்சையிலும் சாதித்துக் காட்டியுள்ளார்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 2018 – 2019 கல்வி ஆண்டில் மாணவர் தலைவியாகவிருந்த மாணவி சந்திரசேகரம் சங்கவி, விளையாட்டுத் துறையில் தேசிய மட்டத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலம் எனப் பெற்று கல்லூரிக்கும் வடக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்தவர்.

2016ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப்பதக்கம் வென்றெடுத்தர். அதே ஆண்டு நடைபெற்ற ஜூனியர் தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

2017ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் 17 வயதுப் பிரிவினருக்கான ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் பெற்றார். அதே ஆண்டு நடைபெற்ற ஜூனியர் தேசிய விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கமும் தட்டெறிதலில் வெண்கலப் பதக்கமும் பெற்று வடக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்தார்.

2018,2019ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் பெற்றார். இவற்றுக்கு மேலாக சதுரங்கத்திலும் பிரகாசித்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் எல்லே அணியில் 2016, 2017ஆம் ஆண்டுகளில் பங்கேற்று அணியின் மாகாண மட்டச் சம்பியனாகுவதில் பங்காற்றினார்.

மேலும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்ட வணிக கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பாடத்தில் தோற்றியிருந்த மாணவி சந்திரசேகரம் சங்கவி, 3ஏ சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 15ஆவது இடத்தையும் தேசிய மட்டத்தில் 107ஆவது இடத்தையும் பெற்றார்.

“எனது அப்பா விவசாயி. 5 பெண் சகோதரங்களுக்கு இளையவரான நான், உயிரியல் பாடத்தை விருப்பமாகக் கற்றுக்கொண்டேன். எனக்கு இந்தப் பெறுபேறு கிடைப்பதற்கு பாடசாலை ஆசிரியர்களின் கற்பித்தலே காரணம். பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு என்றென்றும் நன்றியுடையவளாக இருப்பேன்.

அத்துடன், விளையாட்டுத் துறையில் தேசிய மட்டம் வரை நான் பிரகாசித்ததற்கு பாடசாலையின் ஆசிரியர்களின் பயிற்றுவிப்பே காரணம். அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனக்கு மருத்துவராகும் இலக்கு இருக்கவில்லை. எனினும் உயிரியல் பாடம் மீதான விருப்பு என்னை அதில் சாதிக்க வைத்துள்ளது. எனவே எமது தென்மராட்சி மண்ணில் சகல துறைகளிலும் சாதிப்பதற்குரிய வளங்கள் உள்ளன. இந்த மண்ணைவிட்டு வெளியிடங்களுக்குச் சென்று கல்வி கற்பதைவிட எமது வளங்களைப் பயன்படுத்தி எம் மண்ணுக்கு பெருமை சேர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று மாணவி சந்திரசேகரம் சங்கவி கேட்டுக்கொண்டார்.    #சாதனை #மாணவி #யாழ்ப்பாணம்  #சங்கவி

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.