எதிர்காலத்தில் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களில் நடத்தும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் திட்டத்தை இங்கிலாந்து வரவேற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் 2031 வரையிலான உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களில் நடத்துவது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை கவனம் செலுத்தியுள்ளது.
சர்வதேசத்தின் பல பாகங்களிலும் நடைபெறும் தொழில்முறை இருபதுக்கு 20 தொடர்களின் தாக்கத்தால் டெஸ்ட் போட்டிகள் மீதான இரசிகர்களின் ஆதரவு குறைவடைந்துகொண்டே போகின்றது.
5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கான செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களுக்குள் மட்டுப்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆலோசித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த முடிவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஆதரவு வழங்கியுள்ளது.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்தத் திட்டம் குறித்து மீள் பரிசீலனை செய்வதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரான சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க மற்றும் ஸிம்பாப்வே அணிகள் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தன.
கடந்த பருவ காலத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியதுடன் அந்தப் போட்டி 3 நாட்களில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியா 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானை இவ்வருடத்தில் எதிர்த்தாடவுள்ளது.