யுத்தத்தால் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிந்து தருமாறும் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று (04.01.20) வவுனியா தபால் அலுவலகத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிந்து தருமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 1050 ஆவது தினத்தை முன்னிட்டு கடந்த 27 வருடங்களுக்கு முன்னால் சிறைக்கைதியாக இருந்த போது உயிரிழந்த செல்லபிள்ளை மகேந்திரனை நினைவுகூரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தாம் உயிரிழக்கும் முன் பார்ப்பதற்கு வழியமைக்குமாறு எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்கு மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கூட்டு மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.