பல வருடங்களின் பின்னர் தனது ஊருக்கு வர வேண்டும் என்ற ஆவலுடன் தனது வீட்டை பார்த்து, அதனை துப்பரவு செய்து வந்த முதியவர் நாரி வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த கந்தையா பாலஈஸ்வரன் (வயது-70) என்ற முதியவரே உயிரிழந்தவராவார்.
கடந்த டிசெம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டினை பார்ப்பதற்கு ஆவலாக வந்த நிலையில் வீட்டு வளவினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது கடந்த 2ஆம் திகதி இவருக்கு நாரி வலி ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இறப்பு விசாரணையினை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இதேவேளை, மீசாலை மேற்கு பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் காவற்துறையினர் தெரிவித்தனர். 84 வயதுடைய வேலுப்பிள்ளை சதாசிவம் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்றைய தினம் வீட்டில் உள்ள அனைவரும் பணிக்கு சென்றிருந்த நிலையில் முதியவர் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார். நேற்று மதியம் மகள் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் தந்தையார் கிணற்றிலிருந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் மற்றும் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் என்.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டார். அதன் பின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.