217
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி , தொடர்பிலும் சமூக கட்டமைப்புகள் தொடர்பிலும் அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களும் முரண்பட்டுக்கொண்டனர்.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை காலை சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரான ப. தர்சானந்த் தனது முகநூலில் சபை உறுப்பினர்கள் தொடர்பில் விமர்சித்து எழுதியமை தொடர்பில் குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு சபையில் அது விவாதமாக மாறியது.
அதன் போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடுமையான சொற்பிரயோகங்களை பயன்படுத்தினார்கள். அதேவேளை தமிழீழ தேசிய தலைவரை கொச்சைப்படுத்தும் முகமாகவும் சாதியம் பேசப்பட்டதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.
அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தர்சானந்த் “குலத்தளவே ஆகுமாம் குணம்” என கூறிய போது சபையில் கடும் வார்த்தை பிரயோகங்கள் நடைபெற்று குழப்பங்கள் ஏற்பட்டன.
“நான் எனது முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் சபையில் கேள்வி கேட்க முடியாது. அந்த பதிவில் நான் யாருடைய பெயரையோ சாதியையோ குறிப்பிடவில்லை” என கூறி தர்சானந்த் தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.
அவ்வேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு. ரெமிடியஸ் ” தர்சானந்தின் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை பாருங்கள் அவர் பிறந்தது 1988 , 89 களாக தான் இருக்க வேண்டும். அக்கால பகுதியில் இந்திய இராணுவத்தின் குர்காஸ் படைகள் யாழ்ப்பாணத்தில் இருந்த கால பகுதி. நான் இராவண தோற்றமுடையவன் . அவரிடம் திராவிட தோற்றமுண்டா ?குர்காஸ் தோற்றமுடையவர்.” என கூறினார். அதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
அதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் என பல உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறினார்கள்.
அந்நிலையில் கடும் கோபமுற்ற தர்சானந்த் ” வெளியே வாயா உனக்கு படிப்பிக்கிறேன். ” என ஒருமையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ரெமிடியஸ விளித்து, இதான் நான் சொன்ன ” குலத்தளவாம் குணம் ” , “இவரொரு முட்டாள். இதான் அவரின் குணம். இவர் ஒரு கஞ்சா வக்கீல்” என கடுமையாக சட்டத்தரணி ரெமிடியஸ நோக்கி தர்சானந்த் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட போது , ரெமிடியஸ் , தர்சானந்த்தை நோக்கி தண்ணீர் போத்தலை வீச முற்பட்டார்.
அதனை அடுத்து “சபையின் மாண்பை நீங்கள் குறைத்து கொள்கின்றீர்கள். தயவு செய்து எல்லோரும் உட்காருங்கள்.” என கூறி முதல்வர் ஆர்னோல்ட் ஒலிவாங்கியை நிறுத்தி வைத்தார்.
அதன் பின்னரும் உறுப்பினர்கள் வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டனர். “அமைதியாக இருக்கா விடின் எனது உத்தியோகஸ்தர்களை அழைத்து உங்களை சபையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன்” என தர்க்கத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை முதல்வர் எச்சரித்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் சபை அமைதியானது. #யாழ்மாநகரசபை #முரண்பாடு #தமிழ்தேசியகூட்டமைப்பு #ஈழமக்கள்ஜனநாயககட்சி
Spread the love