தீபிகா படுகோன் தயாரித்து, நடித்துள்ள சப்பாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, இன்று வரை அதற்கு எதிராகப் போராடிவருபவர் லக்ஷ்மி அகர்வால். அவரது வாழ்க்கைக் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சப்பாக். இந்தத் திரைப்படத்தில் லக்ஷ்மியின் கதாபாத்திரத்தை தீபிகா படுகோன் கையாண்டுள்ளார். பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தீபிகா தயாரித்துள்ளார். சப்பாக் திரைப்படம் இன்று (ஜனவரி 10) ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்துள்ளன்.
கடந்த ஜனவரி 7ஆம் திகதி டெல்லி ஜேஎன்யு கல்லூரியில் தாக்குதலுக்குள்ளான மாணவர்களை தீபிகா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ‘சப்பாக்’ திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் பலரும் கூறிவந்தனர். அது தொடர்பான ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. அதேபோன்று சப்பாக் திரைப்படத்துக்காக முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டோம் என்று கூறி ஒரே புகைப்படத்தை வெளியிட்டு பலரும் கேலிக்கு உள்ளானார்கள்.
பல திரைப் பிரபலங்களும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசிவந்த நிலையில் தனது படத்துக்கு புரமோஷன் தேடுவதற்காகவே தீபிகா அங்கு வந்தார் என்று பலரும் கூறி வந்தனர். ‘சப்பாக் திரைப்படம் மூலமாகச் செய்யாத தவறுக்காக வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவித்து வரும் ஒரு வாழ்க்கைப் போராளியின் கதையில் தீபிகா நடித்துள்ளார். இனி எந்த மனிதருக்கு எதிராகவும் அசிட் வீச்சு நடக்கக் கூடாது என்பதை வலியுறுத்த திரைப்படம் எடுத்திருக்கும் அவர் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவளிக்க நிச்சயம் தகுதியுடையவரே. எங்களை எதிர்த்தால் உங்களை உயிருடன் விட மாட்டோம் என்றும், ஆசிட் வீசுவோம் என்றும் மாணவர்களை நோக்கி கூறுபவர்களுக்கு எதிராக தீபிகா தாராளமாக எதிர்ப்புக்குரல் கொடுக்கலாம்’ என்ற கருத்துகளை மனத்தில் கொண்டு சப்பாக் திரைப்படத்தைக் கொண்டாட ரசிகர்கள் தயாராகியுள்ளனர். #சப்பாக் #வரிவிலக்கு #லக்ஷ்மிஅகர்வால் #தீபிகாபடுகோன் ,#அசிட்வீச்சு #ஜேஎன்யு