ஈரானுக்கு எதிரான அமெரிக்க டொனால்ட் டிரம்பின் போர் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற அவையான மக்களவையில் நேற்று (09.01.20) நிறைவேற்றியிருக்கிறது.
இதன்படி அவையின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், 30 நாட்களுக்குள் ஈரானுடனான மோதலில் இருந்து அமெரிக்க. படைகளை டிரம்ப் திரும்பப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் டிரம்ப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஈரான் ராணுவ தலைவர் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்க ராணுவம் கொலை செய்ததற்கு பதிலடியாக, ஈராக்கில் இருக்கும் இரு அமெரிக்க ராணுவ தளங்களின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனாலும், ஈரான் பற்றியும் சுலைமானி பற்றியும் அவர் கூறிய கருத்துகள் ஈரானில் மட்டுமல்ல அமெரிக்காவுக்குள்ளும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன.
டிரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். எனினும் கீழ்சபையான மக்கள் அவையில் ஜனநாயகக் கட்சியினரே பெரும்பான்மை பெற்றுள்ளனர். இந்த நிலையில் மத்திய கிழக்கில் பெருகிவரும் பதட்டங்கள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் கவலையடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. .
குறிப்பாக மத்திய கிழக்கில் கடுமையான பதட்டங்களைத் தொடர டிரம்ப் இலக்கு வைத்துள்ளார் என்றும் இரு நாட்டு அமைதிக்காகவும் உலக அமைதிக்காகவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அவையில் 224-194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனினும் மூன்று குடியரசுக் கட்சியினர் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க, எட்டு ஜனநாயகக் கட்சியினர் எதிர்த்துள்ளனர்.
இந்தத் தீர்மானத்தின்படி அமெரிக்காவில் மேலவை, கீழவை ஆகிய இரு அவைகளின் முழு ஒப்புதல் கிடைக்கப்பெறாவிடின் ஈரானுக்கு எதிரான ராணுவ பிரயோகத்தை முப்பது நாட்களுக்குள் டிரம்ப் நிறுத்த வேண்டும். அமெரிக்க படையினரை திரும்ப அழைக்க வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது.