யாழ்.நவீன சந்தைப் பிரச்சனைகள் தொடர்பில் மாநகர சபையிடம் பல தடவைகள் எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சபை பொறுப்பேற்ற பின்னர் தான் வீதிக்கு குப்பைகள் அதிகளவில் வருகின்றன. இவை தொடர்பில் எந்த அக்கறையும் இன்றி உறுப்பினர்கள் சபையில் சண்டை பிடிப்பது அருவருக்கத்தக்கது என யாழ்.வணிகர் சங்க தலைவர் ஞானகுமார் கவலை தெரிவித்துள்ளார்.
நவீன சந்தை கட்டட தொகுதி வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
இதுவரை காலமும் யாழ்.மாநகர சபை முதல்வர், ஆணையாளர்கள், மற்றும் மாநகர சபை கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுக்களை நடாத்தி இருக்கிறோம்.அதில் நாங்கள் கேட்ட எதுவும் நடைமுறைப்படுத்த வில்லை.
முக்கியமாக நவீன சந்தை கட்டட தொகுதியில் உள்ள கடை உரிமை மாற்றம் தொடர்பில் பேசினோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக எம்.ஏ. சுமந்திரன் , மாவை சேனாதிராஜா மற்றும் யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்டோரிடம் அது தொடர்பில் பேச்சுக்களை நடாத்தினோம்.
கடை உரிமை மாற்றம் செய்ய வேண்டுமாயின் கடைக்க்குரிய 20 வருட காலத்திற்கான வாடகைகள் செலுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டது. அதற்கு சம்மதித்து உரிமையாளர்கள், உரிமை மாற்றத்திற்கான ஆவணங்களை சமர்பித்து விட்டோம். ஆனால் நாங்கள் ஆவணங்களை சமர்பிக்கும் போது இருந்த வாடகையை விட தற்போது அது அதிகரிக்கப்பட்டு உள்ளது. எனவே நாம் ஆவணங்களை சமர்பிக்கும் போது இருந்த வாடகை தொகையையே அறவிட வேண்டும் என கோரினோம். அதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
அடுத்து , நவீன சந்தை கட்ட தொகுதியில் மின் ஒழுக்குகள் காணப்படுகின்றன. இது தொடர்பில் பல வருடங்களாக சுட்டிக்காட்டி வருகின்றோம். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாநகர சபை முதல்வரை கடைத்தொகுதிக்கு அழைத்து சென்று அது தொடர்பில் காட்டினோம். அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, கூறினார்கள் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
அதேபோன்று நவீன சந்தை கட்டட தொகுதி மலசல கூடங்கள் மிக மோசமாக உள்ளது. உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் சில மலசல கூடங்கள் திருத்தப்பட்டன. சில புதிதாக கட்டப்பட்டன. அவற்றை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அதனை பாவிப்பவர்களிடம் குறித்த தனியார் 15 ரூபாய் வீதம் அறவிட்டார். அதற்கு வர்த்தகர்கள் சம்மதிக்கவில்லை.
அது தொடர்பில் வர்த்தகர்கள் மாநகர சபையுடன் பேசினார்கள் அதன் தீர்வாக ஒரு கடைக்கு மாதாந்தம் 750 ரூபாய் அறவீடு செய்வதாக தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்த காசு அறவிடப்பட வில்லை. தற்போது அந்த மலசல கூடங்கள் அது சுத்தமாகவும் இல்லை.
வாடகை பணத்துடன் இதற்கனான பணத்தையும் வாங்கலாம் ஆனால் அதனை நடைமுறைப்படுத்த வில்லை. இது சம்பந்தமாக முதல்வருடன் பேசினோம். எந்த நடவடிக்கையும் இல்லை.
அதேபோன்று கஸ்தூரியார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டட தொகுதி சமூக சீர்கேட்டுடன் கூடிய இடமாக உள்ளது. அதனையும் சுட்டிக்காட்டினோம். அது சுகாதார சீர்கேட்டுடன் இருக்கின்றது. அந்த பெரிய கட்டட தொகுதிக்கு நீர் வசதி இல்லை நீர் தாங்கிகள் வழங்கப்படுவதாக கூறினார்கள். ஆனால் நீர் விநியோகம் நடக்கவில்லை.
அந்த கட்டட தொகுதி கடை உரிமையார்கள் 11 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை யாழ்.மாநகர சபைக்கு நீருக்காக பணம் செலுத்துகின்றார்கள் ஆனால் நீர் வசதிகள் இல்லை.
அது தொடர்பில் நாம் விசாரித்தால் கட்டடம் கட்டியவருக்கும் மாநகர சபைக்கும் இடையில் பல பிரச்சனைகள் இருக்கின்றன என்பது தெரிய வந்தது.இருந்தாலும் வாடகை வாங்குபவர்கள் எனும் அடிப்படையில் மாநகர சபை அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தயாராக இல்லை. பாராமுகமாக உள்ளார்கள்.
அதேவேளை மாநகர சபை எல்லைக்குள் குப்பைகள் கூட உள்ளது. தினமும் மாநகர சபை ஊழியர்கள் குப்பைகளை அகற்றினாலும் அது வீதிக்கு வருகின்றது.
இந்த சபை பொறுபேற்ற பின்னரே வீதிக்கு குப்பை வரும் வீதம் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் இந்த சபை தான் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என அறிமுகப்படுத்தினார்கள் அதனால் தான் அவை வீதிக்கு வருகின்றன.
வாகனங்களுக்கு மக்கள் குப்பையை கொடுத்தால் அது தரம் பிரிக்க வில்லை என திருப்பி கொடுக்கிறார்கள். அதனால் வாகனம் சென்ற பின்னர் மக்கள் அதனை பொறுப்பற்ற விதத்தில் வீதிகளில் வீசி செல்கின்றார்கள்.
எனவே குப்பைகளை தரம் பிரித்து போடும் அளவிற்கு மக்கள் பழக்கப்படும் வரை சில ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி தரம் பிரிக்கப்படாத குப்பைகளை தரம் பிரித்தால் வீதிக்கு வரும் குப்பை குறையும். இது தொடர்பில் மாநகர சபை சிந்திக்க வேண்டும்.
அதேவேளை கடந்த அமர்வில் நடந்த விடயம் அருவருக்கதக்கது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களுக்கு நன்மை செய்ய போனவர்கள் அங்கே குடும்பி பிடி சண்டை பிடிப்பது எமக்கு எதனையும் பெற்று தராது. எனவே தமிழ் மக்களுக்கு சேவையாற்ற போனவர்கள் தமிழ் மக்களுக்கு தேவையான பங்களிப்பை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.