இலங்கையின் புலனாய்வுத் துறையின் பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும், விசேட அதிகாரம் வழங்குவதற்கும் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய (15.01.20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச,புதிய தேசிய புலனாய்வு சட்டத்தினை முன்மொழிந்ததாகவும், இது தொடர்பான மசோதாவைத் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு அவர் ஆலோசனை வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பை பாதிக்கும் நடவடிக்கைகளை கணிப்பதில் இலங்கையின் உளவு அமைப்புகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ள நிலையில் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தணிக்கவும் பரிந்துரைகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த உளவு அமைப்புகள் வெளிப்படுத்திய அச்சுறுத்தல்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதம் மற்றும் பிற நடவடிக்கைகளைத் தடுப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பைப் பேணுவதில் புலனாய்வு அமைப்புகள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உளவுத்துறையின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், உளவுத்துறை அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு உதவுவதற்கும் போதுமான சட்ட விதிகள் இல்லாததால் சில உளவுத்துறை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக என்று அமைச்சரவை அறிக்கை ஒன்று குறிப்பிட்டதன் அடிப்படையில் அந்தக் குறைபாடுகளைத் தடுப்பதற்கு விசேட அதிகாரங்களுடன் கூடிய இந்தப் புதிய தேசிய புலனாய்வுச் சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாககவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.